கோவை தொகுதி பரபர! அதிமுக வாக்குகளை குறிவைக்கும் அண்ணாமலை, களமிறங்காத வேலுமணி

கோவை தொகுதி பரபர! அதிமுக வாக்குகளை குறிவைக்கும் அண்ணாமலை, களமிறங்காத வேலுமணி
X

பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரத்தின் போது

அதிமுக அணிகள் பிளவுபட்ட போது, ஒபிஎஸ் அணிக்கு சென்ற சிங்கை ராமச்சந்திரனுக்கு எஸ்.பி. வேலுமணியின் முழு ஆதரவு இல்லை எனவும் அக்கட்சியினரால் கூறப்படுகிறது.

கோவை மக்களவை தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வேட்பாளராக போட்டியிடுவதாலும், திமுக, அதிமுக கட்சிகள் கோவையை கைப்பற்ற கடுமையாக போராடுவதாலும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கவனமும் கோவையின் மீது திரும்பியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவையின் இறுதி கட்ட களநிலவரம் என்ன எனப் பார்க்கலாம்.

கோவை தொகுதியை 28 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றியே தீர வேண்டுமென்ற முனைப்புடன் போட்டியிடும் திமுக, வேட்பாளர் தேர்வு முதல் இறுதிக் கட்ட தேர்தல் பரப்புரை வரை அனைத்தையும் முறையான திட்டமிடலுடன் செய்து வருகிறது. மேயராக மக்களுக்கு அறிமுகமானவரான கணபதி ராஜ்குமார் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். அண்ணாமலை போட்டியிடுவதால் தொழில் துறையினர் ஆதரவு பாஜகவிற்கு செல்வதை தடுக்கும் வகையில் அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையின் கீழ் உள்ள ஐடி விங்க், பாஜக எதிர்ப்பை சமூக வலைதளங்களில் முன்னிறுத்தி வருகிறது.

திமுகவின் வேட்பாளர் முதல் முதலமைச்சர் வரை அண்ணாமலைக்கு முக்கியத்துவம் அளிக்காமல், பாஜக எதிர்ப்பு என்பதை மட்டும் முன்னிலைப்படுத்தி தேர்தல் பரப்புரை செய்து வருகின்றனர். திமுக பலவீனமாக உள்ள பகுதிகளில் சிறப்பு கவனம் அளிக்கப்பட்டு தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. இறுதி நாள் பிரச்சாரத்தின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முழுமையாக கோவை தொகுதியில் பரப்புரை செய்ய உள்ளார். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வாக்குகள், சிறுபான்மையினர் வாக்குகள், பாஜக எதிர்ப்பு வாக்குகள் ஆகியவை திமுகவிற்கு சாதகமாக உள்ளன.

அதுமட்டுமின்றி திமுக எதிர்ப்பு வாக்குகள் இரண்டாக பிரிவது திமுகவிற்கு கூடுதல் சாதகமாக உள்ளது. இதனோடு இறுதிக்கட்டத்தில் பாஜகவிற்கு வாக்குகள் செல்வதை முடிந்தளவு தடுத்தாலே, வெற்றி பெற்றுவிடலாம் என திமுக திட்டமிட்டுள்ளது. அதேசமயம் கோவையில் திமுக வலிமையாக இல்லாதது, செந்தில் பாலாஜி இல்லாதது, அண்ணாமலையின் நட்சத்திர அந்தஸ்து ஆகியவை திமுகவிற்கு பின்னடைவாக உள்ளன.

கோவையில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே பாஜக வெற்றி பெற்றுள்ளது. நகர்ப்புறங்களில் பாஜகவிற்கு கணிசமான ஆதரவு இருந்தாலும், கிராமப்புறங்களில் பெரியளவில் கட்சி கட்டமைப்பை கொண்டிருக்கவில்லை. அதனால் பூத் கமிட்டிகள் அமைப்பதிலும் அக்கட்சியினர் தடுமாறினர். அதேசமயம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால், அக்கட்சியினர் கூடுதல் உற்சாகத்துடன் பணியாற்றி வருகின்றனர்.

அண்ணாமலை வெற்றி பெற்றால் மத்திய அமைச்சராவர் எனவும், அதனால் கோவைக்கான திட்டங்களை அதிகளவில் கொண்டு வருவார் எனவும் பாஜகவினர் பரப்புரை செய்து வருகின்றனர். அண்ணாமலைக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து இருப்பதாகவும், தொழில் துறையினர் மற்றும் பல்வேறு சாதிய அமைப்புகளின் ஆதரவு இருப்பதாகவும் பாஜகவினர் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வாக்குகள் குறைவாகவே உள்ள நிலையில், கணிசமான புதிய வாக்காளர்கள் மற்றும் தொழில் துறையினர் வாக்குகள் பாஜகவிற்கு வரும் என கூறப்படுகிறது. சிறுபான்மையினர் வாக்குகளை ஈர்ப்பது கடினம் என்பதால், அண்ணாமலை அதிமுக வாக்குகளை குறிவைத்துள்ளார்.

ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் கூட்டணியில் வைத்துக் கொண்டு, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரை அண்ணாமலை தொடர்ந்து புகழ்ந்து பேசி வருகிறார். பிரதமர் மோடியும் அவர்களை தொடர்ந்து புகழ்ந்து பேசி வருகிறார். அதேசமயம் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து வருவதோடு, திமுகவிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அதிமுகவின் வாக்குகளையும், திமுக எதிர்ப்பு வாக்குகளையும் தன்வசப்படுத்தும் வகையில் பரப்புரை செய்து வருவதாக கூறப்படுகிறது. அண்ணாமலையின் நட்சத்திர அந்தஸ்தும், அவர் மத்திய அரசின் பிரதிநிதியாக இருப்பதும் பாஜகவிற்கு சாதகமாக உள்ள நிலையில், அதிமுகவின் வாக்குகளும் செல்லும் பட்சத்தில், அண்ணாமலையின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.


அண்ணாமலை மீது தொடர்ந்து விமர்சனங்களை வைத்து அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் கவனம் ஈர்த்து வருகிறார். அதுமட்டுமின்றி தனது எளிமையான அணுகுமுறையினால், ஒவ்வொரு பகுதியாக சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதிமுகவிற்கு கோவையில் உள்ள வாக்கு வங்கியும், கிராமப்புற வாக்காளர்களும் சாதகமாக உள்ளன. அதேசமயம் அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கோவையில், அக்கட்சியின் செயல்பாடுகள் போதியளவு இல்லை என கூறப்படுகிறது. வலிமையான கூட்டணி இல்லாதது, பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் குழப்பம் போன்றவை சற்று பின்னடைவை தருவதாக பார்க்கப்படுகிறது.

அதிமுகவின் முக்கியத் தலைவராக உள்ள எஸ்.பி. வேலுமணி பொள்ளாச்சி தொகுதிக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை, கோவை தொகுதிக்கு தரவில்லை என சொல்லப்படுகிறது. கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதி வாரியாக நடந்த பூத் கமிட்டி கூட்டங்களில் மட்டுமே தலை தாட்டிய எஸ்.பி. வேலுமணி, பெரிய அளவில் தேர்தல் பரப்புரை மற்றும் வாக்கு சேகரிப்பிற்கு வரவில்லை எனவும், அதிமுக அணிகள் பிளவுபட்ட போது, ஒபிஎஸ் அணிக்கு சென்ற சிங்கை ராமச்சந்திரனுக்கு எஸ்.பி. வேலுமணியின் முழு ஆதரவு இல்லை எனவும் அக்கட்சியினரால் கூறப்படுகிறது.

அதிமுக தலைமை மீது கடும் விமர்சனங்களை வைத்து வரும் அண்ணாமலைக்கு பதிலடி தரும் வகையில், இறுதிக்கட்டத்தில் எஸ்.பி.வேலுமணி களமிறங்கினால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மும்முனை போட்டியில் யார் முந்துவது, யார் யாருக்கு எந்த இடம், என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!