நூறு ஆண்டுகள் பழமையான அரசு–வேம்பு திருக்கல்யாணம்

வேப்பமரத்தை சக்தியாகவும் அரச மரத்தை சிவமாகவும் பாவித்து, அரசு வேம்பு திருக்கல்யாணம் நடத்துவது வழக்கம். அப்படி கோவை அருகே உலக நன்மை வேண்டி, நூறு ஆண்டுகள் பழமையான அரசமரத்திற்கும் வேப்பமரத்திற்கும் திருக்கல்யாணம் நடத்தினர்.

கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த அப்பநாயக்கன்பாளையம் கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கருப்பராயன் கோவில் உள்ளது. இங்கு தல விருட்சமாக 100 ஆண்டுகளுக்கு மேல் ஆன அரசமரமும், வேப்பமரமும் உள்ளது.

அரசமரத்திற்கு பட்டு வேஷ்டி, பட்டு துண்டும், வேப்பமரத்திற்கு பட்டுப் புடவையும் எடுத்து மரங்களை சுற்றி உடுத்தி மலர் மாலை அணிவித்தனர். அர்ச்சகர்கள் வரவழைத்து யாக குண்டம் வளர்த்து வேத மந்திரங்கள் ஓத திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில் மூன்று தம்பதிகளை வைத்து கன்னிகா தானம் செய்தனர். தொடர்ந்து தங்கத்தால் ஆன தாலியினை மஞ்சள் கயிற்றில் கோர்த்து திருமணத்திற்கு வந்திருந்த அனைவரிடமும் ஆசிர்வாதம் பெற்று, 3 பெண்கள் இணைந்து இரண்டு மரங்களை மஞ்சள் சுற்றி கட்டி மூன்று முடிச்சு போட்டு தாலி கட்டினர்.

இந்து முறைப்படி அனைத்து திருமண சடங்குகளுடன் நடைபெற்ற இந்த திருமணத்திற்கு வந்திருந்த பெண்களுக்கு வளையல் மற்றும் மஞ்சள் கயிறு வழங்கினர். மேலும் அனைவருக்கும் திருமண விருந்தும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!