காவல் ஆணையாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தி.மு.க

தி.மு.க மக்கள் கிராம சபை கூட்டங்களை தடுக்கும் காவல்துறையை கண்டித்து – மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தி.மு.க.வினரால் பரபரப்பு

தமிழகம் முழுவதும் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கோவையில் வார்டு தோறும் வார்டு சபை கூட்டங்களானது திமுக சார்பில் நடத்தப்படுகின்றது. இதற்கு கோவை மாநகர காவல் துறை அனுமதி மறுத்து, மக்கள் கிராம சபை கூட்டங்களை நடத்துபவர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் கிராம சபை கூட்டம் நடத்த அனுமதிக்காத மாநகர காவல்துறையை கண்டித்து இன்று திமுக சார்பில் மாநகர காவல் ஆணையாளர் அலுவலக முற்றுகை போராட்டமானது நடத்தப்பட்டது.

திமுக எம் .எல்.ஏ கார்த்திக் தலைமையில் அண்ணாசிலையில் இருந்து ஊர்வலமாக வந்த திமுகவினரை, செஞ்சிலுவை சங்கம் முன்பாக காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். செஞ்சிலுவை சங்கம் முன்பாக இரண்டு அடுக்குகளாக காவல் துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தி திமுகவினரை தடுத்தனர். அப்போது போலீசாருக்கும் திமுகவினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதிமுகவினர் விதிகளை மீறி நடத்தும் கூட்டங்களுக்கு அனுமதி கொடுக்கும் காவல்துறையினர், திமுகவினருக்கு மட்டும் அனுமதி மறுப்பதாக குற்றம் சாட்டினர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட, திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் மற்றும் திமுக மாவட்ட செயலாளர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர். போராட்டம் காரணமாக செஞ்சிலுவை சங்கம் முன்பாக அரை மணி நேரத்துக்கு மேலாக பரபரப்பான சூழல் நிலவியது.

Tags

Next Story
ai marketing future