திருடிய காரை சாலையில் விட்டுச்சென்ற கொள்ளையர்கள்

திருடிய காரை சாலையில் விட்டுச்சென்ற கொள்ளையர்கள்
X
இரண்டு கார்களில் வந்த மர்ம கும்பல் அப்துல் சலாமை கத்தி முனையில் மிரட்டி கார் மற்றும் ரூ.27 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

கோவையில், கேரள ரியல் எஸ்டேட் அதிபரிடமிருந்து, கத்தி முனையில் கடத்தப்பட்ட கார், சிறுவானி சாலையில் மீட்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் அப்துல் சலாம் (50). கேரளாவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன் தினம், தனது கார் ஓட்டுநரான சம்சுதீன் (42) என்பவருடன் பெங்களூரில் இருந்து கோவை வழியாக கேரளாவிற்கு கிளம்பினர். நேற்று அதிகாலை கோவை நவக்கரை அருகே வந்த போது இரண்டு கார்களில் வந்த மர்ம கும்பல் அப்துல் சலாமை கத்தி முனையில் மிரட்டி கார் மற்றும் ரூ.27 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். சம்பவம் தொடர்பாக க.க.சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு உத்தரவின் பேரில் 3 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில் கோவை சிறுவாணி சாலை மாதம்பட்டி அருகே கேரள பதிவு எண் கொண்ட கார் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று பார்த்த போது கேரள ரியல் எஸ்டேட் அதிபரிடம் கொள்ளையடிக்கப்பட்ட கார் என தெரியவந்தது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் உதவியுடன் காரில் இருந்த தடயங்களை போலீசார் சேகரித்தனர். கோவை - கேரள எல்லையில் கொள்ளையடிக்கப்பட்ட கார் சிறுவாணி சாலையில் மீட்கப்பட்ட நிலையில் கோவை மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆங்காங்க போலீசார் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்