சூயஸ் ஒப்பந்த பணிகள் குறித்து கோவை மாநகராட்சி நிர்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - திமுக எம்.எல்.ஏ. நா.கார்த்திக்

சூயஸ் ஒப்பந்த பணிகள் குறித்து கோவை மாநகராட்சி நிர்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்   - திமுக எம்.எல்.ஏ. நா.கார்த்திக்
X
சூயஸ் நிறுவனத்தோடு போடப்பட்ட 3 ஆயிரத்து 150 கோடி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். சூயஸ் ஒப்பந்த பணிகள் குறித்து கோவை மாநகராட்சி நிர்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று சிங்காநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. நா.கார்த்திக் வலியுறுத்தியுள்ளார்.

சூயஸ் நிறுவனத்தோடு போடப்பட்ட 3 ஆயிரத்து 150 கோடி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். சூயஸ் ஒப்பந்த பணிகள் குறித்து கோவை மாநகராட்சி நிர்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று சிங்காநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. நா.கார்த்திக் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

"கோவை மாநகராட்சியில் 2018-19ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் 24 மணிநேரமும் தங்கு தடையின்றி குடிநீர் வழங்க அம்ரூட் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி பில்லூர் இரண்டாவது குடிநீர் திட்டத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 125 எம்.எல்.டி, சிறுவாணி குடிநீர் திட்டத்தின்படி நாளொன்றுக்கு 75 எம்.எல்.டி என மொத்தம் 200 எம்.எல்.டி குடிநீர் 24 மணி நேரமும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தரை மட்ட நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் நீர் உந்து நிலையங்கள், 29 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், 1470 கி.மீ நீளத்திற்கு குடிநீர் பகிர்மான குழாய்கள் அமைக்கப்படும் என்றும் , இத்திட்டம் ஜெஎன்என்யூஆர்எம் திட்டத்தில் இருந்து அம்ரூட் திட்டத்திற்கு மாற்றப்பட்டு சுமார் 595 கோடி ரூபாயில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இதனை நடைமுறைப் படுத்துவதற்குத்தான் தனியார் பங்களிப்பு என்ற பெயரில் சூயஸ் நிறுவனத்திற்கு குடிநீர் விநியோகிக்கும் உரிமத்தை 26 ஆண்டுகளுக்கு வழங்கி 2017 ல் பணி அறிவிப்பு கடிதம் வழங்கப்பட்டது.

அதன் பின்னர் " என்ன மாயம் நடந்ததோ? ஏது நடந்ததோ? " கோவை மாநகராட்சி நிர்வாகம், சுமார் 595 கோடி ரூபாயில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்ட அந்த திட்டத்தை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஒப்புதலோடு புதுப்பித்து, கடந்த 2018 ல் மாநகராட்சியில் உள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்வதற்கு, 26 ஆண்டுகளுக்கு, ரூ. 3 ஆயிரத்து 150 கோடிக்கு பல்வேறு விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகியிருக்கும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கியது. இந்த 595 கோடி ரூபாய் திட்டம் எப்படி 3,150 கோடி ரூபாய் ஆனது என்பது குறித்த மர்மம் யாருக்கும் தெரியாது.

உள்ளாட்சி நிர்வாகத்தில் மக்கள் பிரதிநிதிகள் யாரும் இல்லாத நிலையில், மக்களின் சார்பில் எந்த கருத்துருவும் மேற்கொள்ளப்படாமல் அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகள் ஏற்பாட்டில் இந்த மக்கள் விரோத ஒப்பந்தம் ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டிருக்கிறது.

கோவை மாநகராட்சி நிர்வாகம் மக்களின் எதிர்ப்பை புறந்தள்ளி விட்டு, தொடர்ந்து இத்திட்டத்தை செயல் படுத்தி வருகிறது. எல்லா உயிர்களுக்கும் அடிப்படை தேவையான தண்ணீர் பகிர்வு என்பது இலாப நோக்கம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனத்திடம் ஒப்படைப்பதை மக்களின் நல வாழ்வை பேண வேண்டிய அரசு செய்யலாகாது.

இந்த ஒப்பந்தம் போடப்பட்டு சுமார் மூன்று ஆண்டுகள் ஆகியும், ஒப்பந்தத்தின் படி கோவையில் தரை மட்ட நீர்த்தேக்க தொட்டிகள் , நீர் உந்து நிலையங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைப்பது உள்ளிட்ட சூயஸ் நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள் எங்காவது நடைபெறுகிறதா? இன்று வரை குடிநீர் விநியோக குழாய் பதிக்கும் பணிகள் கிணற்றில் போட்ட கல்லாக அப்படியே உள்ளது.

இந்த சூயஸ் நிறுவன பணியாளர்களின் நிர்வாக குளறுபடிகளால், மாநகரத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் குடிநீர் விநியோகத்தில் பலத்த பின்னடைவு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் சரியான முறையில் செய்யாமல் இருப்பதால் குடிப்பதற்குக் கூட குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் தவித்து வருகிறார்கள்.

மக்களின் வரிப் பணத்தில் , மக்களின் எதிர்ப்பையும் மீறி , ரூ. 3 ஆயிரத்து 150 கோடிக்கு ஒப்பந்தம் போட்டும், அத்தனையும் தற்போது விழலுக்கு இறைத்த நீராகவே உள்ளது. மக்களின் வரிப்பணத்தை வீணாக்கி கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தால் பொதுமக்களுக்கு எந்த ஒரு உபயோகமும் , முன்னேற்றமும் இல்லை. இது கோவையில் உள்ள மக்களுக்கு கோவை மாநகராட்சி நிர்வாகம் செய்யும் மிகப் பெரிய துரோகம்.

இலாபம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனத்திடம் இத்திட்டத்தை கொடுப்பதால் தண்ணீருக்கான கட்டணத்தை மாநகராட்சி கட்டுப்படுத்த முடியுமா? குடிநீரை வணிகமாக்குவதுதான் அரசின் திட்டமா? குடிமக்களுக்கு அரசு செய்து தர வேண்டிய அடிப்படை தேவைகளில் ஒன்று குடிநீர். கோவை மாநகராட்சி நிர்வாகம், வெளிநாட்டு தனியார் நிறுவனமான சூயஸ் நிறுவனத்தோடு 26 ஆண்டுகளுக்கு, ரூ. 3 ஆயிரத்து 150 கோடிக்கு போட்ட ஒப்பந்தத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் எனவும் , சூயஸ் ஒப்பந்த பணிகள் குறித்து கோவை மாநகராட்சி நிர்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இல்லையென்றால் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....