கோவையில் இனி வாட்ஸ் அப் செய்தால் ஆட்டோ வரும்: ரயில்வே நிர்வாகம்
பைல் படம்.
தமிழகத்திலேயே முதல் முறையாக வாட்ஸ் ஆப் மற்றும் க்யூ ஆர் கோட் வாயிலாக ஆட்டோக்களை முன்பதிவு செய்யும் வசதி கோவை ரயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து ரயில்வே துறைக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் ரயில் நிலையமாக கோவை ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் பயணிகள் தங்கிச் செல்வதற்காக நவீன குளிரூட்டப்பட்ட அறை திறக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கோவை ரயில் நிலையம் சார்பில் செல்போன் 'ஆப்' மூலமாக ஆட்டோக்களை முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் கோவை மத்திய ரயில் நிலையத்தில் செல்போன் 'ஆப்' மூலமாகவும், வாட்ஸ் ஆப் மூலமாகவும் ஆட்டோ புக் செய்யக்கூடிய வசதியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை கோவையில் செயல்பட்டு வரும் ஊர் கேப்ஸ் என்ற நிறுவனம் பெற்றுள்ளது.
ஊர் கேப்ஸ் என்ற செயலி மூலமாக ரயில் நிலையத்தில் இருந்தபடி ஆட்டோவை புக் செய்து கொண்டால் கோவை ரயில் நிலையத்தின் பின்புறம் உள்ள இரண்டாவது நுழைவு வாயிலுக்கு ஆட்டோக்கள் வந்து பயணிகளை செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்துச் செல்லும்.
இதே போல் 8094880980 என்ற வாட்ஸ்-ஆப் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பியும் ஆட்டோவை புக் செய்யலாம். இதன் மூலமாக பயணிகள் தங்களுக்கான ஆட்டோவை பேரம் பேசாமல் எடுத்து பயணிக்க இயலும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu