நுழைவுத்தேர்வு பயிற்சி மையங்கள்: ஆண்டுக்கு ரூ 70 ஆயிரம் கோடி வருவாய்
நுழைவு தேர்வு பயிற்சி மையங்கள் - கோப்புப்படம்
CRISIL என்ற அமைப்பு 2020-ல் நடத்திய ஆய்வின்படி 2021-ஆண்டு நாடு முழுவதும் நுழைவு தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் சுமார் 70,000 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டுகின்றன என்பது தெரியவந்துள்ளது. இந்த வருவாய் ஆண்டுக்கு ஆண்டு குறைந்தது 10 சதவீதம் வரை அதிகரிக்கிறது என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.
கிட்டத்தட்ட 7 கோடி மாணவர்கள் கல்வித்தேர்ச்சிக்கு பிறகு நுழைவுத்தேர்வு மையங்களுக்கு பணத்தை கட்டிவிட்டு போராடுகிறார்கள். மாணவ, மாணவியரின் குடும்பத்தினர் தங்களது வருவாயில் 12 சதவீதத்தை, இந்த நுழைவுத்தேர்வு மையங்களுக்கு செலவிடுகின்றனர்.
கல்வி நிறுவனங்களை நடத்துவதைவிட, இந்தியாவில் இனி பயிற்சி மையங்கள் தான் கொடிகட்டிப்பறக்கும் என்று கல்வியாளர்கள் சில ஆண்டுகளாகவே எச்சரித்து வந்தனர். மதிப்பெண் அடிப்படையில் போனால், ஆயிரம் இடத்துக்கு அதிக மார்க் பெற்ற ஆயிரம் பேர் மட்டுமே உயர்கல்வி நிலையத்துக்கு போவார்கள்.
அதையே நுழைவுதேர்வு என்று ஆக்கினால் கோச்சிங் மையங்களுக்கு வெறும் ஆயிரம் சீட்டுக்கு பல லட்சம் பேர் பணத்தோடு போவார்கள். இன்னும் விளக்கமாக சொல்லப்போனால், தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படித்தவர்கள், தமிழக அரசு அதன் செலவில் கட்டிய உயர்கல்வி நிறுவனங்களில் மதிப்பெண் அடிப்படையில் சேரக்கூடாதாம்?
லட்சம் லட்சமாய் பணத்தை வாங்கிக்கொண்டு கொடுக்கும் கோச்சிங்கில் மாணவ, மாணவிகளுக்கு அதிகளவு அறிவு வந்து விடுமாம். ஆனால் 12 ஆண்டுகளாக படித்த படிப்பு, அறிவை தரவே தராதாம். இந்த முரண்பாட்டிற்கு எப்படி தீர்வு காண்பது என்று தெரியவில்லை.
தமிழ்நாட்டை பொறுத்தவரை தமிழக அரசின் பாடத்திட்டங்களுக்கும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும், கிராமப்புற மாணவ, மாணவியருக்கும் உயர்கல்வி சேர்க்கையில் முன்னுரிமை தரும் அளவிற்கு நடவடிக்கைகளை கொண்டு வர வேண்டும்.
வசதி படைத்தவன் பெறும் கல்விக்கும், வசதியில்லாதவன் பெறும் கல்விக்கும் இடையிலான வித்தியாசத்தை குறைக்க அரசு முயற்சிக்க வேண்டும். உயர்கல்வி கற்க விரும்பும் சாமான்யன் எவனுக்கும் திட்டமிட்டு தடைகள் போடப்படுகிறதென்றால் அவற்றை உடைத்தெறிந்தே ஆக வேண்டும்.
இந்த கருத்தினை தமிழகத்தின் திராவிட கட்சிகள் மட்டுமல்ல, பல மாநிலங்களிலும் உள்ள கட்சிகளும் ஏற்றுக் கொள்கின்றன. குறிப்பாக பா.ஜ., கூட அனைவருக்கும் சமநிலை கல்வி என்பதில் உறுதியுடன் உள்ளது.
ஆனால் இதனை எந்த வடிவில் அமல்படுத்தலாம் என்பதில் தான் நாடு முழுவதும் தெளிவான வழிகாட்டுதல் இல்லாத ஒரு சூழல் நிலவுகிறது. இதனால் நுழைவுத்தேர்வு பயிற்சி மையங்கள் பணத்தை வாரிக்குவிக்கின்றன என கல்வியாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu