சென்னையில் மழை பாதித்த பகுதிகளில் 2வது நாளாக முதல்வர் ஆய்வு
சென்னையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்று 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டார்.
சென்னையில், வடகிழக்கு பருவமழை காரணமாக மழைநீர் பல்வேறு பகுதிகளில் தேங்கி உள்ளது. இந்த நிலையில் புறநகர் பகுதிகள் உள்ளிட்ட இடங்களுக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டார். துறைமுகம், ராயபுரம், தண்டையார்பேட்டை உள்பட 8 இடங்களில் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தினார்.
துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கல்யாணபுரம் பின்புறம் அமைந்துள்ள பக்கிங்காம் கால்வாய் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட தமிழக முதல்வர், 5 மதகுகளில் தண்ணீர் எவ்வாறு செல்கிறது; அடைப்பு ஏதேனும் உள்ளதா; ஆகாயத்தாமரைகள் முறையாக அகற்றப்படுகிறதா என, அதிகாரிகளை கேள்வி கேட்டு, மாநகராட்சி அதிகாரிகளை உடனடியாக பணிகளை துரிதப்படுத்தினார். அப்பகுதியில் இருந்த மருத்துவ முகாமை பார்வையிட்டு, நிவாரண முகாம்களில் உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார்.
தொடர்ந்து ராயபுரம் தொகுதி, பாரத் திரையரங்கம் ரவுண்டானா அருகே, மழைநீர் தேங்கிய பகுதிகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்ட பின்பு, உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார். ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதிக்கு காவல் நிலையம் அருகே பொதுமக்களுக்கு, உணவு மற்றும் அரிசி, பாய், பிரெட் உள்ளிட்டவற்றை வழங்கினார். பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முல்லை நகர் மேம்பாலத்திற்கு சென்ற அவர், கால்வாயில் தண்ணீர் எவ்வளவு வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் எம்கேபி நகர் பகுதியில் உள்ள நிவாரண மையத்திற்கு சென்று, உணவு பொருட்களை வழங்கி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து சென்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu