"ஜனநாயகத்தின் கருப்பு நாள்’’ டெல்லி மசோதாவிற்கு முதல்வர் கண்டனம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
டெல்லி அவசர சட்ட திருத்த மசோதா மீது மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், இந்த மசோதாவிற்கு ஆதரவாக 131 வாக்குகளும், எதிராக 102 வாக்குகளும் பதிவாகின.
இந்தநிலையில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் டெல்லி சேவைகள் மசோதா மாநிலங்களைவயில் நேற்று வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்தார்.
அதேபோல் டெல்லி சேவைகள் மசோதா மாநிலங்களைவயில் நிறைவேற்றப்பட்டதுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைநகர் டெல்லியை ஒரு மாநகராட்சியைப் போலத் தரம் குறைக்கும் டெல்லி சேவைகள் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறிய நேற்றைய நாள், மக்களாட்சியின் கறுப்பு நாள்.
எதிர்க்கட்சி ஆட்சி செய்தால் அந்த மாநிலத்தைக் கூடச் சிதைப்போம் என்ற பாஜகவின் பாசிசம் அரங்கேறிய நாளை வேறு என்ன சொல்வது?
29 வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு நாட்டின் தலைநகரையே தரைமட்டத்துக்குக் குறைத்த சதிச் செயலுக்கான தண்டனையை டெல்லி மாநில மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களும் விரைவில் தருவார்கள்.
மூன்று மாதமாக மணிப்பூர் எரிகிறது. அதை அணைக்க முடியாமல் , டெல்லியைச் சிதைக்கத் துடிக்கும் பா.ஜ.க.வின் தந்திரங்களை மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில முதலமைச்சரின் அதிகாரத்தைக் குலைக்கும் இந்த மசோதாவை, பேரறிஞர் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அடிமைக் கூட்டம் ஆதரித்து மாநிலங்களவையில் வாக்களித்திருப்பது எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை.
"நான் யாருக்கும் அடிமையில்லை" என்றபடியே, பா.ஜ.க.வின் பாதம் தாங்கி, "கொத்தடிமையாக" தரையில் ஊர்ந்து கொண்டிருக்கிறார் பழனிசாமி என்பதையே இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu