திருப்பூரில் 3 சிறுவர்கள் பலி; தமிழக அரசு விளக்கம் அளிக்க, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு

திருப்பூரில் 3 சிறுவர்கள் பலி; தமிழக அரசு விளக்கம் அளிக்க, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு
X

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவர்களின் உடல் நலம் குறித்து, நேரில் ஆய்வு நடத்திய அமைச்சர் மு.பெ. சாமிநாதன். அருகில் கலெக்டர் வினீத் உள்ளார்.

Death News -திருப்பூரில் விவேகானந்தா சேவாலயா காப்பகத்தில் மூன்று குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், அடுத்த 48 மணி நேரத்துக்குள் விளக்கம் தர வேண்டும் என, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Death News -திருப்பூர் அவிநாசி ரோடு, திருமுருகன்பூண்டியில், 'விவேகானந்தா சேவாலயம் ஆதரவு எற்போர் குழந்தைகள் காப்பகம்' செயல்பட்டு வருகிறது. இந்தக் காப்பகத்தில் பெற்றோரால் கைவிடப்பட்ட மற்றும் தாய் அல்லது தந்தையை இழந்த 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கி உள்ளனர். இவர்கள் அனைவரும் அம்மாபாளையம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.

இவர்களுக்கு தினமும் உணவு சமைத்து, மூன்றுவேளையும் பரிமாறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு இவர்களுக்கு ரசம் சாதம் இரவு உணவாக வழங்கப்பட்டுள்ளது. அதை சாப்பிட்ட 15-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. நேற்று காலை 10-க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம், காய்ச்சல் ஏற்பட்டது. மாதேஷ், அத்திஷ் மற்றும் பாபு ஆகிய மூன்று சிறுவர்கள் உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், 11 சிறுவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் காப்பகத்தில் இருந்த 3 சிறுவர்கள் உயிரிழந்தது, தமிழகம் முழுவதும் பலத்த அதிர்ச்சியை, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன், காப்பகத்தில் நேரில் விசாரணை நடத்தினார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிறுவர்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, மாவட்ட கலெக்டர் வினீத், கூறுகையில், காப்பகத்தில் இரவு உணவு சாப்பிட்ட 14 சிறுவர்களுக்கு வயிற்றுப்போக்கு, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். விடுதியில் வழங்கப்பட்ட உணவு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில் தான் சிறுவர்கள் இறப்புக்கான காரணம் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் குழந்தைகள் மரணம் தொடர்பாக 3 விசாரணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன் தலைமையில் ஒரு குழுவும், மாவட்ட குழந்தைகள் நல குழும அதிகாரி ரஞ்சித பிரியா தலைமையில் ஒரு குழுவும், சமூக பாதுகாப்புத்துறை இயக்குநர் வளர்மதி ஐ.ஏ.எஸ் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சாமிநாதன் ஆய்வு:

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த செய்தித்துறை அமைச்சர் வெள்ளகோவில் மு.பெ சாமிநாதன், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களின் உடல்நலம் குறித்து நேரில் கேட்டறிந்தார், தேவையான சிகிச்சைகளை விரைந்து மேற்கொள்ளவும், மருத்துவர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். கலெக்டர் வினீத் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

சட்டப்படி நடவடிக்கை, அமைச்சர் கீதாஜீவன் உறுதி:

திருப்பூரில் நடந்த இந்த சம்பவம் குறித்து, முதல்வர் ஸ்டாலின் சமூக நலத்துறை அமைச்சருக்கு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், 'விசாரணைக்கு பிறகு, சமூக நலத்துறையில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். குழந்தைகள் மரணத்திற்கு காரணமாக யார் இருந்தாலும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,' என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசுக்கு உத்தரவு:

இந்நிலையில், திருப்பூரில் மூன்று சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து, 48 மணி நேரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!