மாநில முதல்வர்கள் இப்படி இருக்கணும்....
சென்னையில் நடந்த தெலுங்கு கங்கை திட்ட தொடக்க விழாவில் முதல்வர்கள் என்.டி.ராமாராவ்...எம்.ஜி.ஆர்.,பிரதமர். இந்திராகாந்தி...
இன்று காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்த பின்னரும், கர்நாடகம், தமிழகம் இடையே பிரச்னை தீரவில்லை. முல்லைப்பெரியாறு கண்காணிப்பு ஆணையம் அமைத்த பின்னரும் தமிழகம், கேரளா இடையே முல்லைப்பெரியாறு அணை பிரச்னை தீரவில்லை. காரணம் ஒவ்வொரு மாநில முதல்வர்களும் தற்போது தங்கள் மக்கள் மேல் அக்கரை காட்டுவதாக நினைத்து மற்ற மாநில மக்களின் மீது வெறுப்பினை துாண்டும் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் உண்மையில் ஒரு மாநில முதல்வர் பிற மாநில மக்கள் நலனிலும் அக்கரை காட்ட வேண்டும். மாநில முதல்வராக மட்டுமின்றி அவர் முதலில் இந்தியனாக செயல்பட வேண்டும் என்பதற்கு எம்.ஜி.ஆரும்., என்.டி.ராமாராவும் உதாரணமாக இருந்துள்ளனர்.
எம்.ஜி.ஆர். எதையுமே நுணுக்கமாகவும் தீர்க்க தரிசனத்தோடும் சிந்திக்கக் கூடியவர். சென்னை நகரின் தண்ணீர் பிரச்சினையையும் ஆந்திராவில் கிருஷ்ணா நதியில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டால் பிரச்சினையைத் தீர்க்கலாம் என்றும் ஆந்திர முதல்வர் என்.டி ராமராவிடம் கூறினார். எம்.ஜி.ஆர். சொன்னால் ராமராவிடம் மறுப்பேது? அதன் தொடர்ச்சியாக உருவானது தான் சென்னைக்கு தண்ணீர் வழங்கும் தெலுங்கு கங்கைத் திட்டம். 1983-ம் ஆண்டு ஜனவரியில் ஆந்திர முதல்வராக ராமராவ் பதவியேற்றார். அடுத்த 4 மாதங்களில் தெலுங்கு கங்கை திட்டம் தொடக்க விழா நடந்தது.
1983-ம் ஆண்டு மே 25-ம் தேதி சென்னையில் நடந்த பிரம்மாண்டமான தெலுங்கு கங்கை திட்ட தொடக்க விழாவில் பிரதமர் இந்திரா காந்தி கலந்து கொண்டார். திட்டத்தை செயல் படுத்த தமிழக அரசின் பங்கில் முதல் தவணைக்கான காசோலையை இந்திரா காந்தி மூலம் ராமராவிடம் கொடுக்கச் செய்தார் எம்.ஜி.ஆர்.
1987-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். மறைந்தபோது என்.டி.ராமராவ் சென்னை வந்து கலங்கிய கண்களுடன் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் சொன்ன வார்த்தைகள்…‘எம்.ஜி.ஆர். மறைவின் மூலம் எனது குருநாதரை இழந்து விட்டேன்’. என்.டி.ராமாராவ் சொன்னது உண்மை. இன்று இந்தியாவில் பல மாநிலங்களில் மாநில முதல்வர்கள் மிகவும் மோசமான அரசியல் செய்து வருகின்றனர். இதனால் ராமாராவ் பாணியில் சொன்னால், இன்று இந்தியா நாகரீக அரசியலையும், மக்கள் நலனின் அக்கறை கொண்ட அரசியல் தலைவர்களையும் இழந்து வருகிறது. தற்போது இருக்கும் மக்கள் நலனின் அக்கரை கொண்ட அரசியல் தலைவர்களையாவது நாம் பாதுகாப்போம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu