கெஜ்ரிவால் உருவாக்கிய மாடர்ன் பள்ளியை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புதுதில்லியில், மேற்கு வினோத் நகரில் உள்ள தில்லி அரசு மாதிரி பள்ளியை பார்வையிட்டார். அப்போது தில்லி அரசு கல்வித் துறை இயக்குநர் ஹிமான்சூ குப்தா, தில்லி கல்விமுறை பற்றிய முக்கிய கூறுகள் குறித்து எடுத்துரைத்தார்.
தில்லி அரசுப் பள்ளிகளில் தொழிற்முனைவோர் மற்றும் வணிகம் குறித்த பாடத்திட்டமான பிசினஸ் பிளாஸ்டர்ஸ் படிப்பில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை 13 இலட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இதற்காக 2021-22ஆம் ஆண்டில் தில்லி அரசால் 60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம், மாணவர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்குவதாகும்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் தில்லி மாதிரி பள்ளியின் வளர்ச்சி குறித்த குறும்படத்தையும் பார்வையிட்டதோடு, அப்பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடினார். பின்னர், அப்பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்ட பொருட்களை பார்வையிட்டு, பாராட்டினார். மேலும், அப்பள்ளியில் உள்ள நீச்சல் குளத்தை பார்வையிட்டு, அங்கிருந்த மாணவர்கள் மற்றும் நீச்சல் பயிற்சியாளர்களுடன் உரையாடினார்.
தில்லி அரசு மாதிரி பள்ளியை பார்வையிட்ட பின்பு தமிழ்நாடு முதலமைச்சர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
தில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் மாடர்ன் பள்ளியை உருவாக்கி, அது சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது என்ற செய்தியை நான் கேள்விப்பட்டேன். அதனால், தில்லிக்கு வந்த நான் அந்தப் பள்ளியை பார்வையிடுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்டபோது, நிச்சயமாக நீங்கள் வருகிறபோது நானே வரவேற்று அதை அழைத்துச் சென்று காண்பிக்கிறேன் என்று தில்லி முதலமைச்சர் அவர்கள் சொல்லி, என்னை இங்கு அவரே அழைத்து வந்திருக்கிறார்கள். அதற்காக முதலில் அவருக்கு நான் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றிருக்கக்கூடிய எங்களுடைய அரசு எல்லாத் துறைகளுக்கும் எந்த அளவிற்கு முக்கியத்துவம் தருகிறதோ, அதைவிட அதிகமான அளவிற்கு கல்விக்கும், மருத்துவத்திற்கும் முக்கியத்துவத்தை நாங்கள் தந்து கொண்டிருக்கிறோம். இன்றைக்கு இந்த மாடர்ன் பள்ளி எப்படி நடந்து கொண்டிருக்கிறதோ, அதேபோன்ற பள்ளிகளை தமிழ்நாட்டில் விரைவில் பார்வையிட நாங்கள் முதலமைச்சர் கெஜ்ரிவால் அவர்களை நாங்கள் அழைக்க இருக்கிறோம். அவரும் வருவார், வரவேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களின் சார்பில் உங்கள் மூலமாக நான் அவரைக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர், அரசு மொஹலா கிளினிக்கை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, 500 மொஹலா கிளினிக்குகள் உள்ளதாகவும் அதனை 1000-ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும், இக்கிளினிக்குகளை தில்லி மெட்ரோ இரயில் நிலையம், விமான நிலையம் ஆகிய இடங்களில் தொடங்க உள்ளதாகவும், மகளிருக்கான தனி மொஹலா கிளினிக்குகளை அமைக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வுகளின்போது, தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மனிஷ் சிசோதியா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, தில்லி அரசு பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் ராஜேஷ் பிரசாத் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் கே.நந்தகுமார், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட இயக்குநர் இரா.சுதன்,இ.ஆ.ப., இல்லம் தேடிக் கல்வி சிறப்புப் பணி அலுவலர் திரு. கே.இளம்பகவத், பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி) திருமதி சினேகா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu