கேரளாவில் நடக்கும் மாநாட்டிற்கு முதல்வர் ஸ்டாலின் செல்லக்கூடாது -தமிழக விவசாயிகள் கோரிக்கை

கேரளாவில் நடக்கும் மாநாட்டிற்கு முதல்வர் ஸ்டாலின் செல்லக்கூடாது -தமிழக விவசாயிகள் கோரிக்கை
X

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த தமிழக, கேரள கம்யூனிஸ்ட் தலைவர்கள்.

பலவேடத்துடன் செயல்படும் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில மாநாட்டிற்கு முதல்வர் ஸ்டாலின் செல்லக்கூடாது -தமிழக விவசாயிகள் வலியுறுத்தல்.

தமிழக ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கேரள மாநில மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் 23 வது மாநில மாநாடு இன்று தொடங்கி (ஏப்ரல் 6) முதல் ஏப்ரல் 10-ஆம் தேதி வரை, கண்ணூரில் நடத்தப்படுகிறது. மதுரையில், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில கிளையின் 23 வது மாநில மாநாடு நடந்து முடிந்ததையொட்டி, கேரள மாநிலத்தில் இந்த மாநாட்டை நடத்துகிறது கேரள மாநில மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி. இந்த மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக வர வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

கேரள மாநில தேவசம்போர்டு அமைச்சரான கே. ராதாகிருஷ்ணன், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணனோடு சென்று, தமிழக முதல்வரை நேரில் சந்தித்து இதற்கான அழைப்பு விடுத்திருக்கிறார். கேரளாவின் இந்த கபட நாடகங்களை, தமிழக முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும். பிள்ளையையும் கிள்ளிவிட்டு,தொட்டிலையும் ஆட்டும் கேரளா மார்க்சிஸ்டுகளின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது.முல்லைப் பெரியாறு பிரதான அணையிலிருந்து பேபி அணைக்குச் செல்லும் வழியில் உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு உத்தரவிட்ட, கேரள மாநிலத் தலைமை வனப்பாதுகாவலரை, பணியிடை நீக்கம் செய்வதற்கு பின்னால் இருந்து தெளிவான வரையறையை வகுத்து கொடுத்த தேவசம்போர்டு அமைச்சரான ராதாகிருஷ்ணன் தமிழக முதல்வரை சந்தித்தது வெட்கக்கேடானது.

மாநில உரிமைக்காகவும்,சமூக நீதிக்காகவும் திடகாத்திரமாக களத்தில் நின்று பணியாற்றும் தமிழக முதல்வரின் நன்றி கடிதத்தை, உதாசீனப்படுத்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கேரள மாநில வனத்துறை அமைச்சரான சசீந்திரனை பதவி நீக்கம் செய்துவிட்டு, தமிழக முதல்வரை, அவர்களுடைய மாநாட்டிற்கு அழைத்திருந்தால் தான் தான் சரியாக இருக்கும். ஒரு புறத்தில் ஒரு முதல்வரையே மரியாதை குறைவாக நடத்துவது, மறுபுறத்தில் எதுவும் தெரியாதது போல் அளவளாவுவது என பல அவதாரங்கள் எடுக்கும் கேரள மாநில மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் உள்நோக்கத்தை, தமிழக முதல்வர் புரிந்துகொள்ள வேண்டும். இன்று (ஏப்ரல் 6) முதல் 10-ஆம் தேதி வரை கண்ணூரில் நடக்கும் கேரள மாநில மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் 23 வது மாநில மாநாட்டை, தமிழக முதல்வர் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags

Next Story