முதல்வர் மனம் இறங்கி மன்னிப்பாரா? நடவடிக்கை எடுப்பாரா? எதிர்பார்ப்பில் கட்சியினர்
தேனி நகராட்சி தலைவர் பதவி கூட்டணியில் காங்., கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் தேனி தி.மு.க., நகர செயலாளர் பாலமுருகன் தனது மனைவி ரேணுப்பிரியாவை வேட்பாளராக அறிவித்து தலைவர் பதவியை கைப்பற்றினார். கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பதவிகளை கைப்பற்றிய தி.மு.க.,வினர் விலக வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் எச்சரித்தார்.
ஆனால் தேனியில் விடாப்பிடியாக பாலமுருகன் பதவி விலக மறுத்து வருகிறார். தேனி மாவட்ட காங்.,- தி.மு.க., தலைவர்கள் இடையே பல சுற்று பேச்சு வார்த்தைகள் நடந்தும் பலனில்லை. இந்நிலையில் இன்று காலை 10 மணி வரை பாலமுருகன் தனது மனைவியை ராஜினாமாக செய்ய வைக்க தி.மு.க., கெடு விதித்தது. ஆனால் பாலமுருகன் கெடுவை மீறினார். பின்னர் மாலை 5 மணி வரை அந்த கெடுவை தி.மு.க., நீடித்தது. அப்போதும் பாலமுருகன் பிடி கொடுக்கவில்லை.
இதனால் இன்று இரவு வரை பாலமுருகனுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தேனி வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் தங்க.தமிழ்செல்வனும், அமைச்சர் ஐ.பெரியசாமியும் இந்த விஷயத்தினை தி.மு.க., தலைமைக்கு கொண்டு சென்று விட்டனர். குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கே கொண்டு செல்லப்பட்டது.
அதில் தேனியின் ஒட்டுமொத்த நிலவரம் குறித்தும் விளக்கப்பட்டது. பாலமுருகன், அவரது மனைவி ரேணுப்பிரியா பற்றியும் பாசிட்டிவ் ஆக பல தகவல்களை இரண்டாம் கட்ட தலைவர்கள் முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இருப்பினும் முதல்வர் மனம் இறங்கி மன்னிப்பாரா? அல்லது நடவடிக்கை எடுப்பாரா? என தேனி மாவட்ட தி.மு.க.,வினர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இது குறித்து நகர செயலாளர் பாலமுருகனிடம் கேட்டதற்கு, 'இந்த சிக்கலுக்கு தீர்வு காண இன்னும் இரண்டு நாள் அவகாசம் தேவைப்படும். காங்., கட்சிக்கு துணைத்தலைவர் பதவி கொடுப்பது தொடர்பாக பேசி வருகிறோம்' என்றார். தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்செல்வனிடம் கேட்டதற்கு, 'பாலமுருகன் அவகாசம் கேட்டிருக்கிறார். இன்று இரவு வரை அவகாசம் கொடுத்திருக்கிறோம்' என்று மட்டும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu