பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்
பெரியார் பிறந்த செப்டம்பர் 17 ம் நாளை சமூகநீதி நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.
இது குறித்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது :
திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முறையாக 1967ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது, இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்குக் காணிக்கை என்று பேரறிஞர் அண்ணா அறிவித்தார். ஆறாவது முறை ஆட்சிக்கு வந்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழக அரசு, அந்தப் பகுத்தறிவுப் பகலவனின் அறிவுச்சுடரைப் போற்றும் விதமாக வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு ஒன்றை விதி எண் 130-ன் கீழ் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களின் அனுமதியோடு, இந்த மாமன்றத்தில் வெளியிடுவது என் வாழ்வில் கிடைத்தற்கரிய நல்வாய்ப்பு என்பதை எண்ணி மகிழ்கிறேன்.
ஈ.வெ. இராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன் இதைச் செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணியைச்செய்ய யாரும் வராததினால் நான் அதை மேற்போட்டுக்கொண்டு தொண்டாற்றி வருகிறேன்" என்று அறிவித்துக்கொண்டு 95 வயது வரை மூத்திரச் சட்டியைத் தூக்கிக் கொண்டு இந்த இனத்துக்காக நாட்டுக்காகப் போராடியவர் தான் தந்தை பெரியார்
"மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு' என்பதையே அடிப்படையாகக் கொண்டு சுயமரியாதை இயக்கம் தொடங்கிய தந்தை பெரியார் மானமும் அறிவும் உள்ள மனிதர்களாக ஆக்குவதற்கு அறிவுலக ஆசானாக இந்த நாட்டை வலம் வந்தார். அவர் நடத்திய போராட்டங்கள் யாராலும் 'காப்பி' அடிக்க முடியாத போராட்டங்கள் அவர் எழுதிய எழுத்துகள் யாரும் எழுதத் தயங்கும் எழுத்துக்கள் அவர் பேசிய பேச்சுக்கள், யாரும் பேசப் பயப்படும் பேச்சுகள் தமிழர் நலமெல்லாம் தன்னுடைய நலமாகக் கருதினார். தமிழர்க்கு எதிரானது எல்லாவற்றையும் தனது எதிரியாகக் கொண்டு எதிர்த்திருக்கிறார். அவர் நடந்த நடை, அவர் நடத்திய சுற்றுப்பயணங்கள் அவர் நடத்திய மாநாடுகள். அவர் நடத்திய போராட்டங்களைச் சொல்லத் தொடங்கினால், இந்த மாமன்றத்தையே பத்து நாட்களுக்கு ஒத்தி வைத்துப் பேச வேண்டும்.
"மனிதனுக்கு மனிதன் ஏற்றத் தாழ்வு இல்லை ஆணும் பெண்ணும் சரிநிகர் சமாளம்" - இவை இரண்டும்தான் அவரது அடிப்படைக் கொள்கைகள். பெண்ணடிமைத்தனம் ஒழிப்பு இலக்குகளாக இருந்திருக்கின்றன, அறிவியல்பூர்வமாகக் கேள்வி தூண்டினார்
அவரது சுயமரியாதைச் சிந்தனையால் தமிழினம் சுயமரியாதைச் சிந்தனையைப் பெற்றது. அவர் உருவாக்கிய பகுத்தறிவின் கூர்மையால் தமிழினம் சிந்தனைத் தெளிவு பெற்றது. சாதியால் அடக்கி ஒடுக்கப்பட்ட மனிதர்கள் கல்வி வேலைவாய்ப்பில் மேன்மையை அடைவதற்கான சமூகநீதிக் கதவைத் திறந்து வைத்தது அவரது கைத்தடியே ஆகும். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இன்று இந்தியா முழுமைக்கும் சமூகநீதிக் கருத்துகள் விதைக்கப்பட்டுள்ளன என்றால் அதற்கு அவர் போட்ட அடித்தளமே காரணம்.
நாடாளுமன்றத்தின் வாசலுக்கே போகாத அவரால்தான் அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் முதலாகத் திருத்தம் இந்தியாவில் செய்யப்பட்டது. சட்டமன்றத்துக்குள் வர ஆசைப்படாத அவரது சிந்தனை கொண்ட சட்டங்கள் ஏராளமாக இந்த மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன தனது சிந்தனையை அடுத்தவர் மூலமாகச் செய்ய வைக்கும் அபூர்வமான ஆற்றல் அவருக்குத்தான் இருந்தது.
என் வாழ்வில் வசந்த காலம் என்பது தந்தை பெரியாரோடு நான் இளைஞராக இருந்து வலம் வந்த காலம்தான்' உருவாக்கிய போறிஞர் அண்ணா சொன்னார். என்று நம்மையெல்லாம் பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்" என்று எழுதினார் முத்தமிழறிஞர் கலைஞர்.
பெரியாருடைய குருகுலத்துப் பயிற்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கி அரசியல் புரட்சிகரக் கருத்துக்களைத் தமிழ்நாட்டில் விதைத்து, ஆட்சிக்கு வந்து அதே கொள்கையை நிறைவேற்றி வரும் அந்தக் காட்சியை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இது உலகில் எந்த சீர்திருத்த இயக்கத்துக்கும் கிடைக்காத புகழாகும். பேசிவிட்டுப் போயிருப்பார்கள் சீர்திருத்தவாதிகள், தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒரு சீர்திருத்த இயக்கம். அரசியல் இயக்கமாக மாறி, அந்த இயக்கம் சீர்திருத்தக் கருத்துக்களை நடைமுறைப்படுத்தி, சட்டமாகவும் ஆக்கி அந்தச் சமுதாயத்தை மேன்மை அடைய வைத்திருக்கிறது.
அவரால் கல்வி பெற்றவர்கள் அவரால் வேலைவாய்ப்பைப் பெற்றவர்கள், அவரால் அதிகாரத்தைப் பெற்றவர்கள், அவரால் பெண்ணினம் அடைந்த வளர்ச்சிகள் ஒடுக்கப்பட்ட மக்கள் அடைந்த எழுச்சிகள் ஆகியவற்றுக்கு இன்றைய தமிழ்நாடே சாட்சி. இந்த விதை தந்தை பெரியார் போட்ட விதை பேரறிஞர் அண்ணா அதற்கு எருவூட்டினார் கலைஞர் அவர்கள் வளர்த்தார்கள்.
இந்த உணர்வை உணர்ச்சியை, எழுச்சியை சிந்தனையை விதைக்கும் அடையாளமாக அறிவாசான் தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17ஆம் நாளை ஆண்டுதோறும் 'சமூகநீதி நாள்' ஆகக் கொண்டாடுவது என்று தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. சமூகநீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்!" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu