கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு நிவாரணப் பொருட்களை வழங்கினார் முதல்வர்
செம்மஞ்சேரி, சுனாமி குடியிருப்பில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை முதல்வர் வழங்கினார்.
தமிழ்நாடு முழுவதும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 7-ஆம் தேதி தொடங்கி இரவு, பகல் பாராமல் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருவதால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிந்து வருகிறது.
இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வடகிழக்கு பருவமழையையொட்டியும், வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும், கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளைப் பார்வையிட்டு, ஆய்வு செய்து, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக இன்று அப்பகுதிகளில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து செம்மஞ்சேரி, சுனாமி குடியிருப்பில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார். மேலும் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமையும் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் நேற்று செம்மஞ்சேரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளைப் பார்வையிடச் செல்லும் வழியில், அலர்மேல்மங்காபுரத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள்
பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதாகவும், மழைநீர் வடிவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். அக்கோரிக்கையின் அடிப்படையில், அவர்களுக்குத் தேவைப்படும் பால், உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களை வீடு வீடாகச் சென்று வழங்குவதற்கும், மழைநீர் வடிவதற்கும் துரித நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இன்று மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலையில் மழைநீர் வெளியேற 9 மீட்டர் அகலத்தில் உள்ள பாலத்தை 70 மீட்டர் அகலத்தில் ரூ. 13 கோடி மதிப்பீட்டில் உயர்மட்டப் பாலமாக அமைக்கும் பணியையும், பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியிலிருந்து நேரடியாக பக்கிங்காம் கால்வாயை இணைக்கும் வகையில் ரூ. 47 கோடி செலவில் மழைநீர் வடிகால் (Macro Drain) அமைத்திட உத்தேசிக்கப்பட்டுள்ள பணிகள் குறித்தும் முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே. கோபால், இ.ஆ.ப., சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இ.கா.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu