மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கலந்துரையாடினார் முதல்வர்
முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் இன்று தருமபுரி மாவட்டம், வத்தல் மலை, ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மலைவாழ் மக்கள், விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
இந்த சிறப்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து, அதன் மூலமாக அதிலும் குறிப்பாக பழங்குடியினத்தை சார்ந்திருக்கக்கூடிய மக்களை சந்தித்து, உங்களுடைய கோரிக்கைகளை கேட்கக்கூடிய ஒரு வாய்ப்பை பெற்றமைக்கு நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன்.
எங்களுக்கு இது ஒரு மறக்க முடியாத நாள், எங்களைத் தேடி நீங்கள் வந்திருக்கிறீர்கள், அதற்காக நன்றி சொல்கிறோம் என்று இங்கே பேசியவர்களெல்லாம் குறிப்பிட்டுச் சொன்னீர்கள். உள்ளபடியே உங்களைப் பார்க்கும்போது நான் அதிகமாக மகிழ்ச்சியடைகிறேன். உங்களுடைய கோரிக்கைகளை நீங்கள் எடுத்துச் சொன்னீர்கள். நேற்று சேலம் மாவட்டத்திலும், இன்று தருமபுரி மாவட்டத்திலும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
நேற்று மாலை சேலத்தில் கலைஞர் வருமுன் காக்கும் திட்டம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தேன். இந்தத் திட்டம் ஏதோ புதிதாக உருவாக்கப்பட்ட திட்டம் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். ஏற்கனவே கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது செயல்பாட்டிற்குக் கொண்டுவந்து பெரிய அளவில், மிகப் பாராட்டுக்குரிய வகையில், மக்கள் பயன்படக்கூடிய வகையில், ஏழை, எளிய மக்கள், நடுத்தர மக்கள் பயன்படக்கூடிய வகையில் அந்தத் திட்டம் நடந்த கொண்டிருந்தது. ஆனால், இடையிலே ஆட்சி மாற்றம் வந்த காரணத்தால் பத்து வருடங்கள் அந்தத் திட்டம் முடக்கி வைக்கப்பட்டது. மீண்டும் கலைஞர் ஆட்சி, நான் எப்போதுமே எல்லா இடத்திலும் சொல்வது உண்டு, இது என்னுடைய ஆட்சி, எங்கள் ஆட்சி என்று நான் சொல்ல மாட்டேன், இது நம் ஆட்சி நம்முடைய ஆட்சி, நமக்காக நடைபெறக்கூடிய ஆட்சி என்றுதான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். அந்த அடிப்படையில்தான் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
குக்கிராமங்களில் கூட மருத்துவ முகாம்களை நடத்தி சிகிச்சை தந்து கொண்டிருக்கிறோம். இங்கே ஒரு சகோதரி சொன்னார்கள், வீடு தேடி எங்களுக்கு மருத்துவ சேவை வந்துகொண்டிருக்கிறது, BP ஆக இருந்தாலும், Sugar ஆக இருந்தாலும் வீட்டிற்கே வந்து எங்களுக்கு மருந்து கொடுக்கக்கூடிய ஒரு நல்ல ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறேன் என்று பெருமையாக அந்தத் சகோதரி சொன்னார்கள். ஆக, நோய் பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கும் ஏழைகளுக்கு அவர்களுடைய வீட்டிற்கே சென்று அந்த நோயை குணப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதற்குரிய மருந்துகளை வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
பணம் இருப்பவர்கள் மட்டும்தான் மருத்துவமனைக்கு போகமுடியும் என்ற சூழ்நிலை இருந்து வந்தது. அதை இன்றைக்கு மாற்றிக் காட்டியிருக்கிறோம் நம்முடைய ஆட்சியில் காசு, பணம் இருந்தாலும், மருத்துவமனைக்கு வர இயலாத
அளவுக்கு பாதிக்கப்பட்டவர்களையும் குணப்படுத்திக் கொண்டு வருகிறோம்.
இதற்கிடையில் இன்னொன்று. ஏறக்குறைய இரண்டு வருடமாக, ஒன்றே முக்கால் வருடமாக கொரோனா என்ற ஒரு தொற்று நோயில் சிக்கிக்கொண்டு நாம் பல பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். அப்படிப்பட்ட கொரோனாவை, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முழுமையாக ஒழித்துவிட்டோம் என்று சொல்லமாட்டேன், ஓரளவுக்கு கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம். இதுவே ஒரு மிகப் பெரிய சாதனையாக இன்றைக்கு எல்லோராலும் பேசப்படுகிறது. ஒரு பக்கம் மருத்துவ நெருக்கடி, இன்னொரு பக்கம் நிதி நெருக்கடி இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் நாம் எதிர்கொண்டிருக்கிறோம்.
கொரோனா என்ற கொடுமையான தொற்று பரவிய நேரத்தில் ஆரம்பக்கட்டத்தில், முழு ஊரடங்கு போட்டோம். ஊரடங்கு போட்டால்தான் அந்த நோயை கட்டுப்படுத்த முடியும். ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய ஏழை, எளிய மக்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் நாம் ஆட்சிக்கு வந்தவுடனே. தேர்தல் நேரத்தில் வாக்குறுதியாக சொன்னோம், கலைஞருடைய பிறந்த நாள் ஜூன் 3ஆம் தேதி வந்தவுடன், நாம் ஆட்சிக்கு வந்தபிறகு அவருடைய பிறந்தநாள் அன்றைக்கு 4000 ரூபாய் வழங்குவோம் என்று அன்றைக்கு சொன்னோம். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடனே, கலைஞர் பிறந்தநாளுக்காக காத்திராமல், வந்தவுடனேயே ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் 4 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை வழங்கிய ஆட்சிதான் கலைஞருடைய ஆட்சி என்பது உங்களுக்கே தெரியும். தேர்தலுக்கு முன்பு, எல்லா கட்சிகளும் தேர்தல் களத்தில் ஈடுபடுகிறபோது, நாங்கள் பதவிக்கு வந்தால், பொறுப்புக்கு வந்தால், ஆட்சிக்கு வந்தால் அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று சொல்வார்கள், அது மரபு. அதை நிறைவேற்றுகிறார்களா, நிறைவேற்றவில்லையா என்ற பிரச்சனைக்கெல்லாம் நான் போக விரும்பவில்லை.
ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரைக்கும் தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகளைச் சொன்னோம். அந்த 505 வாக்குறுதிகளில், நான் நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறேன். 202 வாக்குறுதிகளை நாம் நிறைவேற்றி முடித்திருக்கிறோம். அந்த 202 வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். நிறைவேற்றுவதற்கான அரசாணையை வெளியிட்டிருக்கிறோம். மீதமுள்ள வாக்குறுதிகளையும் படிப்படியாக நிச்சயமாக, உறுதியாக நிறைவேற்றிக் கொடுப்போம் என்ற அந்த உறுதியை நான் இந்த நேரத்தில் சொல்ல விரும்புகிறேன்.
அதில் முக்கியமாக ஆதிதிராவிடர் பழங்குடி ஆணையம் அமைக்கப்படும் என்று தேர்தல் நேரத்தில் சொன்னோம். இத்தகைய ஆணையத்தை அமைத்து அதற்கான சட்டமுன்வடிவைக் கொண்டுவந்து, சட்டமன்றத்தில் அதை சட்டமாக்கியிருக்கிறோம். மிக விரைவில் அதற்குரிய தலைவர், உறுப்பினர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். அந்த ஆணையம் சொல்லக்கூடிய ஆலோசனைகளையெல்லாம் பரிசீலித்து நிச்சயமாக அவைகளை நிறைவேற்றுவோம் என்று நான் உங்களிடத்திலே உறுதியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அவர்களிடம் உங்களுடைய கோரிக்கைகளையெல்லாம் நீங்கள் சொல்ல வேண்டும். எல்லோருடைய கோரிக்கைகளையும் கேட்டு செயல்படுத்தக்கூடிய அரசுதான் இந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு.
நேற்றைய தினம் சேலத்தில் மரவள்ளிக் கிழங்கு உற்பத்தி செய்யும் உழவர்கள், சவ்வரிசி விற்பனையாளர்களைச் சந்தித்து அவர்களுடைய கோரிக்கைகளை நான் கேட்டேன். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நடத்துபவர்களைச் சந்தித்தேன், அவர்களது கோரிக்கைகளையும் கேட்டிருக்கிறேன். அவர்களது கோரிக்கைகள் அனைத்தையும் தொகுத்து நாம் நிச்சயமாக நிறைவேற்றப்போகிறோம். படிப்படியாக அதை நிறைவேற்றுவோம் என்ற உறுதியை அவர்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.
மக்களின் தேவையை அறிந்து செயல்படுத்தித் தரும் அரசாக திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசு . இப்படி உங்களை நான் இன்றைக்கு சந்திக்க வந்திருக்கிறேன் என்றால், உங்களுடைய கோரிக்கைகளைக் கேட்டு, அவைகளை நிச்சயமாக நிறைவேற்றுவேன் என்ற அந்த உறுதியை சொல்வதற்காகத்தான் இன்றைக்கு வந்திருக்கிறேன் என்ற அந்த செய்தியை மட்டும் உங்களிடம் எடுத்துச் சொல்லிக்கொள்கிறேன்.
சாலை வசதிகளைப் பற்றி சொன்னீர்கள், போக்குவரத்து வசதிகளைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறீர்கள். மகளிர் சுய உதவிக் குழுவைப் பற்றி கூட சில சகோதரிகள் இங்கே பேசுகிறபோது, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி
இருந்தபோதுதான், கலைஞர் அவர்கள் முதன்முதலில் மகளிர் சுய உதவிக் குழுவை எங்கு ஆரம்பித்தார் என்றால், தருமபுரி மாவட்டத்தில்தான் ஆரம்பித்தார் என்பது வரலாறு.
அந்த மகளிர் சுய உதவிக் குழுவிற்கு மானியத் தொகை, வங்கிக் கடன் சுழல் நிதி இதையெல்லாம் தேடித் தேடி, கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, நான் அன்றைக்கு உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தேன். அதற்குப் பிறகு துணை முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்தேன். அந்த பொறுப்பை ஏற்று பணியாற்றிய நேரத்தில், ஒரு மாவட்டத்திற்கு ஒரு மாதத்திற்கு இரண்டு முறை, மூன்று முறை நான் சுற்றுப்பயணம் செய்தேன். அப்படி சென்று, அந்த சுய உதவிக் குழுவிற்கு சுழல் நிதி, வங்கிக் கடன், மானியம் இதையெல்லாம் நேரடியாகவே நானே சென்று, அவர்களுக்கு வழங்கினேன்.
ஒவ்வொரு விழாவிலும், அரசு விழாவிலும் அந்த நிகழ்ச்சியை இணைத்துக்கொண்டு நடத்தினேன். 4000 பேர் வந்தாலும் சரி, 400 பேர் வந்தாலும் சரி, 4 பேர் வந்தாலும் சரி அனைவருக்கும் அவர்கள் கையில் நானே என் கையால் கொடுத்துவிட்டுத்தான் சென்றிருக்கிறேன். அந்த அளவிற்கு மகளிர் சுய உதவிக் குழுவிற்கு முக்கியத்துவம் தந்த ஆட்சி திமுக ஆட்சி. ஆனால் இடையில் பத்தாண்டு காலம் அந்த மகளிர் சுய உதவிக் குழு வங்கிக்குச் செல்ல முடியவில்லை , கடன் வாங்க முடியவில்லை , சுழல் நிதி பெற முடியவில்லை , மானியத் தொகை பெற முடியவில்லை. ஆக, மீண்டும் அதற்கு புத்துணர்வு ஏற்படுத்தி, மீண்டும் மகளிர் சுய உதவிக் குழுவிற்கு கம்பீரமாக இன்றைக்கு அவர்கள் நடமாடக்கூடிய வகையில் ஒரு சூழலை ஏற்படுத்தியிருக்கிறோம்.
மகளிர் சுய உதவிக்குழு எதற்காக தொடங்கப்பட்டதென்றால், பெண்கள் யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் அவர்களுடைய சொந்தக் காலில் நிற்க வேண்டும், தன்மானத்துடன் வாழ வேண்டும், சுய மரியாதையோடு வாழ வேண்டும், யாரையும் எதிர்பார்க்காமல் அவர்கள் வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பதற்காகத்தான் தொடங்கப்பட்டது. அந்த சுய உதவிக் குழுவிற்கு மீண்டும் புத்துணர்வு ஏற்பட்டிருக்கிறது என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆக பழங்குடி மக்களாக இருக்கக்கூடிய உங்களையெல்லாம் இன்றைக்கு நான் வேறுபடுத்தி பார்க்கிறேன் என்று நினைக்க வேண்டாம். எங்களில் ஒருவராகத்தான் நான் உங்களை இன்றைக்கு சந்திக்க வந்திருக்கிறேன்.
உங்கள் முகத்தைப் பார்க்கும்போது, எனக்கு அளவிலாக மகிழ்ச்சியும், உற்சாகமும் ஏற்படுகிறது. எனவே, அந்த நம்பிக்கையோடு உங்களுடைய அடிப்படைத் தேவைகளுக்கான எல்லா வசதிகளையும் நிச்சயமாக, உறுதியாக நிறைவேற்றுவோம், நிறைவேற்றுவோம் என்ற அந்த உறுதியை மட்டும் நிறைவு கருத்தாகச் சொல்லி உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி கூறி விடைபெறுகிறேன். என்று முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 36 பயனாளிகளுக்கு ரூ.14.40 இலட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களும் மற்றும் 3 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 492 பயனாளிகளுக்கு ரூ.99.54 இலட்சம் மதிப்பிலான முதியோர் உதவித்தொகை, இயற்கை மரணம் மற்றும் விபத்து நிவாரண நிதியுதவிகள்; மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 26 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25.99 இலட்சம் மதிப்பிலான பேட்ட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 27 பயனாளிகளுக்கு ரூ. 22.44 இலட்சம் மதிப்பிலான தையல் இயந்திரம், இலவச வீடு, வீட்டுமனைப் பட்டா, கறவை மாடுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 35 பயனாளிகளுக்கு ரூ.1.70 இலட்சம் மதிப்பிலான விலையில்லா சலவைப்பெட்டிகள்; குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.44.92 இலட்சம் மதிப்பிலான புதிய தொழில் முனைவோருக்கான மானியத்துடன் கூடிய கடனுதவிகள்;
வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.5.65 இலட்சம் மதிப்பிலான சொட்டுநீர் பாசனக் கருவிகள், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 59 பயனாளிகளுக்கு ரூ.95.73 இலட்சம் மதிப்பில் விவசாயிகளுக்கான பல்வேறு மானிய நிதியுதவிகள்; தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 3 ஊராட்சி அளவிலான மகளிர் குழு கூட்டமைப்புகளுக்கு ரூ.85.00 இலட்சம் பெருங்கடன் உதவிகள்; தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் 554 பயனாளிகளுக்கு ரூ.18.23 இலட்சம் மதிப்பிலான பணியிடத்து விபத்து மரண நிதியுதவி, கல்வி உதவித்தொகை, ஓய்வூதியம், திருமண உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள்;
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.38,400 மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் 780 பயனாளிகளுக்கு ரூ.9 கோடியே 75 இலட்சத்து 36 ஆயிரம் மதிப்பிலான பசுமை வீடுகள், தனிநபர் கிணறு, மாட்டுக்கொட்டகை மற்றும் ஆட்டுக்கொட்டகைகள் அமைப்பதற்கான நிதியுதவி, சலவைப்பெட்டி, முடிதிருத்தும் உபகரணம், தையல் இயந்திரம், புளி பதப்படுத்தும் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள்; சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சமூக பாதுகாப்புத் துறையின் சார்பில் கோவிட்-19 தொற்றினால் உயிரிழந்த 86 நபர்களின் குழந்தைகளுக்கு ரூ.2.58 கோடி நிவாரணத்தொகை
என மொத்தம் 2116 பயனாளிகளுக்கு 16 கோடியே 47 இலட்சத்து 35 ஆயிரத்து 433 ரூபாய் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் அடையாளமாக 10 பயனாளிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, பழங்குடியினருக்கு விலையில்லா கறவைப் பசுக்களை வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டி.என்.வி.எஸ். செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஜி.கே. மணி, திரு.எஸ்.பி. வெங்கடேஷ்வரன். தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி எஸ். திவ்யதர்ஷினி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu