தமிழக மாணவர்களுக்கு உலகத்தர பயிற்சி -மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுரை
தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழக மாணவர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்று வரும் வகையில் உலகத்தர பயிற்சி அளிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் செயல்பாடுகள், துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகளின் முன்னேற்றம், புதிதாகச் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று நடந்தது.
இக்கூட்டத்தில், கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் ஒலிம்பிக், சர்வதேச மற்றும் இந்திய அளவிலான போட்டிகளில் தமிழகத்தை சார்ந்த விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் பங்கேற்று,பதக்கங்கள் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில்,
உலகத்தரத்திலான பயிற்சி வழங்க, விளையாட்டுக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும் வேண்டும் என்று கூட்டத்தில் அறிவுறுத்தினார். மேலும் ஒவ்வொரு விளையாட்டிலும் திறமையும் ஆர்வமும் உள்ள கிராமப்புறத்தைச் சார்ந்த மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு, உறைவிடம் மற்றும் தேவையான விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதுடன், உயர் செயல்திறன் மிக்க பயிற்சி அளித்துப் பன்னாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய வழிவகைகள் குறித்து கேட்டறிந்தார்.
தமிழக விளையாட்டு வீரர்களுக்கு உலகத்தரத்திலான பயிற்சி அளிக்கும் வகையில் நான்கு ஒலிம்பிக் அகாடமிகள் ஏற்படுத்துதல், சென்னையில் பிரம்மாண்ட விளையாட்டு நகரம் அமைத்து அனைத்து வகையான போட்டிகளுக்கும் உயர்தரப் பயிற்சி அளித்தல்,
அரசு வேலைவாய்ப்புகளில் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டினை முழுமையாகச் செயல்படுத்துவதோடு, தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் விளையாட்டையும் சேர்த்துக் கொள்ளுதல், விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குதல் ஆகியவை குறித்து கூட்டத்தில் வலியுறுத்தினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில்,சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன்,விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு, நிதித்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மா, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முதன்மை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா ஆகியோர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu