சென்னை விமானநிலையத்தில் மழை வெள்ள ஆபத்தை உணர்த்தும் நவீன கருவி

சென்னை விமானநிலையத்தில் மழை வெள்ள ஆபத்தை உணர்த்தும்  நவீன கருவி
X

வெள்ள அறிவிப்பு காட்டும் புதிய கருவி.

சென்னை விமானநிலையத்தில் மழை வெள்ள ஆபத்தை முன்னதாக அறிவிக்கும் நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது .

சென்னை விமானநிலையத்திற்குள் மழை வெள்ள ஆபத்தை முன்னதாகவே அறிந்து கொள்ள நவீன கருவியை இரண்டாவது ஓடுபாதை அருகே பாலத்தில் ஏா்போா்ட் அத்தாரிட்டி அமைத்துள்ளது. ஆனால், கருவியின் பயனை தெரிந்து கொள்ள 10 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

சென்னை விமான நிலையத்தின் எல்லை, அடையாறு ஆற்றின் ஓரம் அமைந்துள்ளது. இதனால், பருவமழை காலத்தில் சென்னையில் கனமழை பெய்யும் போது, விமான நிலையம் வெள்ள அபாயத்தை சந்திக்க நேரிடுகிறது. அதனால் சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முனையம் மற்றும் சா்வதேச முனையத்தில் விமானங்கள் புறப்பாடு,தரையிறங்குவது பாதிக்கப்படுகிறது.

இந்த பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண,சென்னை விமானநிலைய நிா்வாகம் தற்போது,புதிய ஏற்பாடு ஒன்று செய்துள்ளது.அதன்படி அடையாறு ஆறில் ஓடும் நீரின் அளவை தொடர்ந்து அறிந்து கொள்ளும் வகையில், நீரின் அளவை தானாக பதிவு செய்யும், தானியங்கி இயந்திரம், இரண்டாவது விமான ஓடுபாதை பாலம் பகுதியில் பொறுத்தப்பட்டுள்ளது.

இந்த இயந்திரம், அடையாறு ஆறில் ஓடும் நீரின் அளவை தொடர்ந்து பதிவு செய்து, சென்னை விமான நிலைய நிர்வாக கட்டடத்தில் அமைந்துள்ள, கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும்.பாலத்தின் கீழ் ஓடும் நீரின் அளவு, 9.5 மீட்டர் வரை உயரும் போது, கட்டுப்பாட்டு அறையில், அபாய எச்சரிக்கை மணி ஒலிக்கப்படும். மேலும், விமான நிலையத்தின் 10 அதிகாரிகளுக்கு, எச்சரிக்கை குறுந்தகவல் அனுப்பப்படும்.

இந்த எச்சரிக்கை வசதி வாயிலாக, சென்னை விமான நிலைய, இயக்ககத்தின் முக்கியமான கட்டமைப்புகள், வெள்ள பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்படும். இவ்வாறு சென்னை விமானநிலையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளது.

ஆனால், இந்த கருவி எந்த அளவு செயல்படும்?அதனால் பயன் எந்த அளவு ஏற்படும்? என்பதை தற்போது அறிந்து கொள்ள முடியாது.இந்த ஆண்டு பருவ மழை காலமான நவம்பா்,டிசம்பா் மாதங்களில் தான் தெரிந்து கொள்ள முடியும்.ஏனென்றால் அப்போது தான் பாலத்தின் கீழ் ஒடும் நீரின் அளவு 9.5 மீட்டா் அளவுக்கு இருக்கும்.எனவே இந்த கருவியின் பலனை அறிய இன்னும் 10 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

Tags

Next Story