களப்பணியாளர்கள் நீக்கமா? ஓபிஎஸ்க்கு அமைச்சர் சேகர்பாபு பதில்!

களப்பணியாளர்கள் நீக்கமா? ஓபிஎஸ்க்கு அமைச்சர் சேகர்பாபு பதில்!
X

சென்னை கே.கே.நகரில் பொதுமக்களுக்கு அமைச்சர் சேகர்பாபு, தயாநிதிமாறன் எம்பி ஆகியோர் உணவு வழங்கியபோது.

அதிமுக ஆட்சியில் பணி அமர்த்தப்பட்ட களப்பணியாளர்கள் நீக்கப்படுவதாக ஓ.பி.எஸ். கூறயதற்கு அமைச்சர் பி.கே.சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை கே.கே.நகர் பகுதியில் முழு ஊரடங்கையொட்டி சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பும் இணைந்து 1000 மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மூலம் நடமாடும் காய்கறி விற்பனையை இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் துவக்கி வைத்தனர்.

முன்னதாக வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. அதில் ஏராளமான வியாபாரிகள் கலந்துகொண்டு தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்..

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.கே.சேகர் பாபு, ஊரடங்கால் மக்கள் எந்தவகையிலும் பாதிக்காத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. 5 ஆயிரம் தள்ளுவண்டிகள், 2 ஆயிரம் குட்டியானைகள் மூலம் காய்கறி, பழம் விற்பனை செய்யப்படுகிறது என்றார்.

மேலும் வியாபாரிகள் இதுபோன்று விற்பனை செய்ய முன்வந்தால் அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் அடையாள அட்டை வழங்கப்படும் என்று கூறினார்.

கொரோனா காலத்தில் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு, மனிதாபிமானத்தோடு குறைந்த விலையில் காய்கறி உள்ளிட்டவை கிடைக்க இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளதாகவும், அதிக விலைக்கு விற்பனை செய்யாத வண்ணம் கண்காணிப்பு நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், எழுப்பூர் ரயில் நிலையத்தில் 200க்கும் மேற்பட்டோர் வீடு செல்ல முடியாமல் தவித்த போது, மாநகராட்சி சார்பில் உடனடி நடவடிக்கை அவர்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது என்றார்.

மேலும் அதிமுக ஆட்சியில் பணி அமர்த்தப்பட்ட களப்பணியாளர்கள் நீக்கப்படுவதாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். குற்றச்சாட்டுக்கு, அதுபோன்று யாரும் நீக்கப்பட மாட்டார்கள் என்று முதலமைச்சர் மாநகராட்சி ஆணையர் ஏற்கனவே விளக்கம் அளித்துவிட்டார் என்றும், முன்னாள் துணை முதலமைச்சர் இதனை காமாலை கண்ணோடு பார்ப்பதாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர், நடமாடும் காய்கறி கடைகளை கண்காணிக்க மண்டல வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

நடமாடும் காய்கறி கடைகள் எந்தெந்த இடங்களில் உள்ளது என்பதை மாநாகராட்சி இணையதளத்தில் வெளியிடப்படும் இதன் மூலம் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்.

காய்கறி கடைகள் மற்றும் விலை குறித்து வரும் புகார்களை விசாரிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது சந்தேகங்கள் மற்றும் பிரச்சனைகள் இருந்தால் 044 45680200, 9499932899 தொடர்பு கொள்ளலாம்.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் விக்ரமராஜா அளித்த பேட்டியில், பொதுமக்களுக்கு காய்கறி எளிதில் கிடைக்கும் வகையிலும் விவசாயிகள் பாதுகாக்கும் வகையில் இந்த நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் பெரிய அளவில் உதவும். சென்னை மாநகரில் மட்டும் 5,000 நடமாடும் காய்கறி வாகனங்கள் காய்கறி விற்பனையில் ஈடுபடும்.

அனைத்து தரப்பு மக்களும் ஊராடங்கிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் மேலும் அதிக விலைக்கு காய்கறி வருகிறார்களா என்பதை கண்காணிப்பதற்கு சென்னை மாநகராட்சி சார்பில் 25 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனோ பரவலை தடுப்பதற்கும் மேலும் பாதிப்பில் இருந்து விலகுவதற்கு அனைவரும் கொரோனோ தடுப்பு ஊசியை செலுத்தி கொள்வதே உகந்தது என்றார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!