சென்னை கே.கே.நகரில் ரவுடி வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு

சென்னை கே.கே.நகரில் ரவுடி வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு
X

வெடிகுண்டுகள் வீசப்பட்ட ரவுடியின் வீடு.

சென்னை கே.கே.நகரில் பிரபல ரவுடியின் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, கே.கே நகர், மேற்கு வன்னியர் தெருவைச் சேர்ந்தவர் சுமன்ராஜ், 18. இவர் மீது, விருகம்பாக்கம், கே.கே.நகர், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், நேற்று இரவு சுமன்ராஜ் வீட்டிற்கு ஆயுதங்களுடன் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், அவரது வீட்டில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பியது. இதில் சுமன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்கள் சேதமடைந்தன.

கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்தில் நடத்திய விசாரணையில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய தக்காளி பிரபா, கோழி பாபு, அவரது கூட்டாளிகள் நாட்டு வெடிகுண்டு வீசியது தெரியவந்தது. கடந்த, 2018 செப்டம்பர் 13ம் தேதி, சுமன்ராஜின் அண்ணன் பிரபல ரவுடி புறா மணியை, தக்காளி பிரபா துாண்டுதலில், கோழிபாபு மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து, வானகரம் மீன் மார்க்கெட் அருகே வெட்டி கொலை செய்தனர்.

சில தினங்களுக்கு முன், புறா மணியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டுள்ளது. தன் அண்ணணை கொலை செய்த கோழி பாபு, தக்காளி பிரபா ஆகியோரை கொலை செய்து பழிக்குப்பழி தீர்க்க, சுமன் தன் ஆதரவாளர்களுடன் திட்டம் வகுத்துள்ளார்.

இதை தெரிந்து கொண்ட கோழி பாபு, தக்காளி பிரபா ஆகியோர் நேற்று இரவு சுமன்ராஜை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, மூன்று தனிப்படை அமைத்து, குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். ரவுடி சுமன்ராஜிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!