சென்னை வேளச்சேரியில் சட்டகல்லூரி மாணவர்கள் தாக்கியதில் ஒருவர் காயம்
சென்னை வேளச்சேரியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்குதல் நடத்தியது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
சென்னை வேளச்சேரி, அம்பிகா நகரை சேர்ந்தவர் வெற்றி செல்வன்(28), இவர் ஐ.ஐ.டி.யில் சிவில் பிரிவில் காங்கீரிட் கலவை தணிக்கை செய்யும் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு 10.30 மணியளவில் வெற்றிசெல்வன் மற்றும் அவரது நண்பர் சரவணன்(22), இருவரும் மது அருந்திவிட்டு வேளச்சேரி டான்சி நகர் அருகே டீக்கடை வெளியே சிக்கன் பக்கோடா சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது வெற்றி செல்வன் அவரது காதலியிடம் செல்போனில் சத்தமாக பேசிக் கொண்டிருந்தார். இதனை அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வழக்கறிஞர் சுரேஷ்(25), எனபவர் வேடிக்கை பார்த்துள்ளார். ஏன் என்னையே பார்க்கிறாய் என கேட்ட போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
உடனே வழக்கறிஞர் சுரேஷ், சட்டக்கல்லூரி மாணவர்கள் 20 க்கும் மேற்பட்டோரை வரவழைத்து இருவரையும் சரமாருயாக தாக்கியுள்ளனர். கற்களை கொண்டு தாக்கியதில் வெற்றி செல்வனுக்கு பின் மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இரு தரப்பும் மோதிக் கொண்டது தொடர்பாக பொதுமக்கள் வேளச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து அனைவரையும் காவல் அழைத்து சென்றனர். படுகாயமடைந்த நபரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரு தரப்பும் புகார் அளித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக அடையார் துணை ஆணையர் மகேந்திரன் நேரில் வந்து சட்டக் கல்லூரி மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
வேளச்சேரியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாகி விட்டது, சட்டம் படிப்பவர்கள் என்பதால் போலீசார் அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்வதில்லை, சமீபத்தில் வேளச்சேரி 100 அடி சாலையில் மதுக்கடையை சூறையாடி, பார் ஊழியரை அடித்தனர். நடவடிக்கை இல்லை, உணவகம் ஒன்றில் சாப்பிட வந்த நபரை அடித்து பல்லை உடைத்த போதும் வழக்குப்பதிவு செய்யவில்லை, காவலர் ஒருவரிடம் தகராறில் ஈடுபட்ட போதும் வழக்குப்பதிவு செய்யவில்லை, இப்படி காவல்துறையினர் கண்டும் காணாமல் இருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu