பொங்கலுக்கான கரும்பினை நேரடியாக விவசாயிகளிடமே கொள்முதல் செய்ய அரசு உத்தரவு
பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்புடன், கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என்று தமிழக அரசு முன்னதாக அறிவித்து இருந்தது.
கரும்பு கொள்முதலை இறுதி செய்வதற்காக, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுக்கள் அமைக்கப்பட்டு, கொள்முதல் பணிகள் நடந்து வருகிறது. கரும்பு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, கரும்பு கொள்முதல் குறித்து, 13 தெளிவான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
1. பன்னீர் கரும்பு மட்டுமே கொள்முதல் செய்யப்படவேண்டும்
2. கொள்முதல் செய்யப்படும் முழுகரும்பின் விலைஅதிகபட்சம் ரூ.33 ஆக இருக்க வேண்டும் (போக்குவரத்து மற்றும் இதர செலவுகள் உட்பட).
3. கொள்முதல் செய்யப்படும் கரும்பின் உயரம் 6 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும்.
4. கொள்முதல் செய்யப்படும் கரும்பு மெலிதாக இல்லாமல் சராசரி தடிமனைவிட கூடுதலாக இருக்க வேண்டும்.
5. நோய்தாக்கிய கரும்பு கொள்முதல் செய்யப்படக் கூடாது.
6. அந்தந்த மாவட்டங்களில் விளையும் கரும்பினை கொள்முதல் செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதில் விவசாயிகள் தரப்பிலிருந்து எந்தவிதமான புகார்களுக்கும் இடமளிக்கக்கூடாது.
7. இந்த வருடம் கரும்பு கொள்முதல்விலை 10சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், அதற்கேற்றவாறு விவசாயிகளிடம் கடந்த ஆண்டு கொள்முதல் செய்யப்பட்ட விலையைவிட கூடுதலாக விலைநிர்ணயம் செய்யப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் கடந்த ஆண்டு கொள்முதல் செய்த விலையையோ அல்லது அதற்கு குறைவாகவோ விலைநிர்ணயம் செய்யப்படக்கூடாது.
8. கரும்பு கொள்முதல் செய்யும்போது,அந்தந்த மாவட்ட விவசாயிகளிடமிருந்து நேரடியாகவோ அல்லது வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைசங்கம் மூலமாகவோ மட்டுமே கொள்முதல் செய்யப்படவேண்டும். எக்காரணம் கொண்டும் இடைத்தரகர்கள் அனுமதிக்கப்படக்கூடாது.
9. கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கான விலை விவசாயிகளுக்கு உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும்.
10. எந்தெந்தநாளில் எத்தனை அட்டைகளுக்கு பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறதோ, அதற்கேற்றவாறு கரும்புபடிப்படியாக கொள்முதல் செய்யப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் முன்கூட்டியே அனைத்து கரும்பையும் கொள்முதல் செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் கரும்பு காய்ந்து போவதற்கான வாய்ப்பு உள்ளது.
11. கொள்முதல் செய்யப்படும் கரும்பு குடும்பஅட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் வரை பாதுகாப்பாக வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது.
12. கரும்பின் நுனியிலிருக்கும் தோகையை வெட்டாமல் முழுகரும்பையும் குடும்பஅட்டைதாரர்களுக்கு வழங்கவேண்டும்.
13. குடும்பஅட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்குவதில் எந்தவிதமான புகார்களுக்கும் இடமளிக்காமல் விநியோகம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
மேற்கூறிய அறிவுரைகளைத் தவறாமல் பின்பற்றும்படி தொடர்புடைய கூட்டுறவுசங்கங்களின் இணைப்பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனை கண்காணிப்பதற்கு தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கூடுதல் பதிவாளர் நிலையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, இந்தப்பணியினை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu