கொரோனா அதிகரித்து வரும் மாவட்டங்களில் கூடுதல் கண்காணிப்பு, அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்

கொரோனா அதிகரித்து வரும் மாவட்டங்களில் கூடுதல் கண்காணிப்பு, அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்
X

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் (பைல் படம்)

கொரோனா அதிகரித்து வரும் மாவட்டங்களில் கட்டுப்படுத்த, மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை செய்து, கூடுதல் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

மீண்டும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வரும் மாவட்டங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாம் அலை ஓய்ந்து தமிழ்நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் மதுரை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இது குறித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், அந்த மாவட்டங்களில் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் அந்த மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு தொற்று கட்டுப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

இதுவரை தமிழ்நாட்டிற்கு ஒரு கோடியே 56 லட்சம் தடுப்பூசிகள் மத்திய அரசு வழங்கி இருப்பதாகவும் அதில் ஒரு கோடியே 48 லட்சம் மக்களுக்கு செலுத்தியது போக 8 லட்சம் கையிருப்பில் இருப்பதாகவும் மா சுப்பிரமணியன் கூறினார்.

செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தை குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அளித்துள்ள அறிக்கைக்கு பதில் அளித்த மா சுப்பிரமணியன் செங்கல்பட்டு எங்கே இருக்கிறது என்பது கூட அவருக்குத் தெரியாது அங்கே ஒரு தடுப்பூசி ஆய்வகம் இருப்பதும் அவருக்கு தெரியாது, நாங்கள் எடுத்த முயற்சியைக் கூட அவர்கள் எடுக்கவில்லை என்று பேசினார்.,

நீலகிரி அரியலூர் மாவட்டங்களை இந்தியாவிலேயே முற்றிலுமாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாவட்டங்களாக ஏற்படுத்தும் வண்ணம் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் கூறினார்.

முன்னதாக திருவான்மியூரில் கொரோனா விழிப்புணர்வு வாகனங்களை அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மூன்றாம் நிலை ஏற்படாத வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த வாகனங்கள் பயன்படும் என்று அமைச்சர் பேசினார். முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் 10 வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!