வேளச்சேரியில் மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட 4 பேர் கைது

வேளச்சேரியில் மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட 4 பேர் கைது
X

மூதாட்டியிடம் செயின் பறித்ததாக கைது செய்யப்பட்ட நால்வர்.

சென்னை வேளச்சேரியில் மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை வேளச்சேரி மருதுபாண்டி சாலை அருகே கடந்த 17ம் தேதி நடந்து சென்று கொண்டிருந்த 59 வயதான பெண் அருணாதேவி கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்கச் சங்கிலியை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த இருவர் பறித்துச் சென்றனர்.

இது குறித்து அருணா தேவி கொடுத்த புகாரின் பேரில் வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆய்வாளர் சந்திர மோகன் தலைமையில், உதவி ஆய்வாளர் அருண், தலைமை காவலர் தாமோதரன் அடங்கிய தனிப்படை அமைத்து சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து செயின் பறிப்பு கொள்ளையர்கள் செல்லும் வழியெல்லாம் சி.சி.டி.வி.யை கண்காணித்து, கைவேலி அருகே இருசக்கர வாகனத்தில் செல்லும் போது விரட்டிச் சென்று போலீசார் மடக்கி பிடித்தனர்.

அவர்களை மடக்கி பிடித்து விசாரித்ததில் கண்ணகி நகரை சேர்ந்த சகோதரர்கள் ஹக்கீம்(24), ஜான்பாஷா(31), மற்றும் இவர்களது கூட்டாளிகளான நீலாங்கரையை சேர்ந்த சந்தோஷ்குமார்(22), கண்ணகி நகரை சேர்ந்த விஜயகுமார்(30), என்பது தெரியவந்தது.

இவர்கள் மீது 10 க்கும் மேற்பட்ட செயின் பறிப்பு வழக்குகள் பழவந்தாங்கல், பல்லாவரம், மடிப்பாக்கம், பரங்கிமலை உள்ளிட்ட காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. ஜான்பாஷா மீதி ஒரு கொலை வழக்கு உட்பட 18 குற்றவழக்குகளும், ஹக்கீம் மீது 5 வழக்குகளும் உள்ளது.

கொள்ளையடித்த நகைகளை மணப்புரம் கடையில் விற்பனை செய்து பணத்தை வைத்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களிடமிருந்து 35 சவரன் தங்க நகை, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து நால்வர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!