முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உடன் விசிக தலைவர் தொல் திருமாவளவன் சந்திப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன். (பைல் படம்)
சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்தார். நேற்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அயோத்திதாசப் பண்டிதர் மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் தொல் திருமாவளவன் கூறியதாவது
தமிழக முதல்வரை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம்.
தமிழ் சமூகத்தின் மேம்பாட்டிற்காக தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்ட தலைவர்களை நினைவுகூர்ந்து அவர்களைப் போற்றும் வகையில் அவர்களின் பங்களிப்பை வருங்கால தலைமுறையினருக்கு உணர்த்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக நேற்று இரண்டு அறிவிப்புகள் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் வெளியிட்டார்
வ உ சி யின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு 14 அறிவிப்புகளை வெளியிட்டார். கட்சி சார்பற்ற முறையில் மக்களுக்காக தொண்டாற்றியவர்களை போற்றும் பண்பு மிக உயரிய பண்பு அந்த வகையில் அரசுக்கு பாராட்டு தெரிவித்தோம்.
அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம் எழுப்பப்படும் என்ற அறிவிப்பு இருட்டடிப்பு செய்யப்பட்ட ஒரு வரலாறு மீட்டெடுக்க படுகிறது என்ற வகையில் ஆதி குடியினர், பூர்வ தமிழர்கள் இன்று பேர் உவகை அடைகின்றனர்.
தந்தை பெரியார் அவர்களின் காலத்திற்கு முன்பே இந்த மண்ணில் தமிழ் பௌத்தம் என்ற பெயரில் சமூக மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் அயோத்திதாச பண்டிதர்
சட்டமன்றத்தில் சிந்தனைச்செல்வன் வைத்த கோரிக்கையும்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நீண்ட நாட்களாக வைத்து வந்த கோரிக்கையை அங்கீகரித்து மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது.
திமுக அரசு சமூக நீதிக்கான அரசு, சமூக நீதி களத்தில் திமுக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உற்ற துணையாக இருக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu