திமுகவின் தலைக்குமேல் கத்தி தொங்குகிறது: முன்னாள் அமைச்சர்.டி.ஜெயக்குமார்

திமுகவின் தலைக்குமேல் கத்தி தொங்குகிறது:  முன்னாள் அமைச்சர்.டி.ஜெயக்குமார்
X

அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார்

தவறு செய்யும் தேர்தல் அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு பதில் சொல்ல வேண்டிவரும் என்றார் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

தவறு செய்யும் தேர்தல் அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு பதில் சொல்ல வேண்டிவரும், திமுகவின் தலைக்குமேல் கத்தி தொங்குகிறது

என்றார் அதிமுக முன்னாள் அமைச்சர்.டி.ஜெயக்குமார்.

சென்னை மாநகராட்சியின் திரு.வி.க.நகர் தொகுதிக்கு உட்பட்ட வட்டம் 73,74 ல் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பட்டாளத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

முன்னதாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: முதல்வர் ஸ்டாலின் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கண்டிப்பாக தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.கடந்த தேர்தலின்போது ஆட்சிக்கு வந்தவுடன் மகளிருக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் தருவோம் என்றார்கள். 9 மாதம் ஆகிவிட்டது. இதுவரை தரவில்லை. மக்களும் இப்போது இதுபற்றி கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். இப்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தோல்வியைத் தழுவும் என்ற காவல்துறையின் புலனாய்வு அறிக்கை ஸ்டாலினிடம் சென்றுள்ளது. நிச்சயமாக திமுக மண்ணை கவ்வும் என்ற நிலை உருவாகியுள்ளதால் அதன் காரணமாக மறுபடியும் நாங்கள் ஆயிரம் ரூபாயைத் தருவோம் என்று பழைய ஆயுதத்தை எடுக்கிறார்கள்.இப்போதுகூட எப்போது தருவோம் என்று சொல்லவில்லை.தேர்தல் முடிந்தவுடன் என்ன சொல்வார்கள். நாங்கள் எப்போது தருவோம் என்று தேதியைக் குறிப்பிட்டோமா என்று கேட்பார்கள். இவர்கள் எப்போது தருவார்கள் என்றால் அது கடைசிவரை கேள்விக்குறிதான்?

2024 ல் பாராளுமன்றத் தேர்தல் நடக்கும் நேரத்தில் 2 கோடி நபர்களுக்கு வேலை தருவோம் என்று சொல்லிவிட்டு. 2 லட்சம் பேருக்குத் தருவார்கள். அதை வைத்து நாங்கள் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என்று சொல்லலாம். இல்லை என்றால் 2026 ல் சட்டமன்றத் தேர்தல் வருவதற்கு 6 மாதத்திற்கு முன்பு 2 லட்சம் பேருக்கு அளித்துவிட்டுத் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என்று சொல்வார்கள்.

நாங்கள் அறிவித்தப்படி 2 ஆயிரம் கோடி இல்லதரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவோம். இந்த தேர்தல் முடிந்தவுடன் தருவோம் என்று ஸ்டாலின் சொல்லத் தயாரா? அவர் சொல்ல மாட்டார். இப்போது தேர்தல் நடக்கிறது. இதில் திமுகவிற்கு தோல்வி ஏற்படும் என்று காவல்துறை அறிக்கை அளித்துள்ளதால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த தேர்தல் முடிந்தவுடன் 2 கோடி பேருக்கு ஆயிரம் ரூபாய் மாதம், மாதம் தருவோம் என்று சொல்லுங்கள். மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறவேண்டும் என்பதற்காகத் தோல்வி பயத்தின் வெளிப்பாடுதான் இந்த ஆயிரம் ரூபாய் ஆயுதத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளார்.

பொங்கல் பரிசாக 100 ரூபாய் அளிக்க வக்கில்லாத அரசு இந்த அரசு. ரூ 500 அளிக்கத் துப்பில்லை. ஆயிரம் ரூபாய் தராத வக்கற்ற அரசு இந்த அரசு. நாங்கள் 2,500 ரூபாய் பலாசுளைபோல் அளித்தோம். மக்கள் ஜாதி, மதம், இனம் அனைத்தையும் கடந்து மிகவும் மகிழ்ச்சியாக 2 கோடி பேர் அதனால் பொங்கலைக் கொண்டாடினார்கள்.இப்போது பொங்கல் பரிசில் 500 கோடி ரூபாய் ஊழல் செய்துவிட்டு, வெறும் குப்பையை அளித்து, 500 ரூபாய் ரூபாய் தருவதற்கு வக்கில்லாத அரசு எப்படி ஆயிரம் ரூபாய் தரும். தோல்வி பயத்தின் வெளிப்பாடுதான் ஸ்டாலினுடைய பேச்சு.

கோவையில் திமுகவினர் பரிசு பொருட்கள் அளித்ததை கைப்பற்றியுள்ளார்கள். தேர்தல் நடக்கும்போது பொதுவாகவே பல கெடுபிடிகள் இருக்கும். தேர்தல் நடைமுறை மிகக் கடுமையாக இருக்கும். இப்போது இங்குத் தேர்தல் நடைமுறையை அமல்படுத்துவதுபோலவா இருக்கிறது. தேர்தல் விதிமுறைகள் யாருக்கு என்றால் கழகத்திற்கும், அதன் தோழமைக கட்சிகளுக்கு மட்டும்தான். திமுகவுக்கு தேர்தல் விதிமுறைகள் என்பது கிடையாது. இதுவரை எவ்வளவு பணம் கைப்பற்றினார்கள். ரகசியமாக பணம் கொடுத்து வாக்குகளைப் பெறலாம் என்ற நம்பிக்கையில்தான் திமுக இன்றைக்கு உள்ளது.

அதன் காரணமாகவே மக்களை அவர்கள் சந்திக்கவில்லை. கழகத்தினர் எழுச்சியோடு பிரச்சாரம் செய்துவருகிறார்கள். திமுகவினர் பேண்டு வாசித்துக்கொண்டு, மக்கள் கேள்வி கேட்பார்கள் என்று ஒட்டமாக ஓடுகிறார்கள். அவர்கள் நம்பி இருப்பது குண்டர்களையும். பணபலத்தையும், அதிகார பலத்தையும், அதில், காவல்துறையை முழுமையாக பயன்படுத்தி எப்படியாவது குறுக்குவழியில் வெற்றிபெற வேண்டும் என்ற முயற்சியில் செயல்படுகிறார்கள். இவை அனைத்தையும் தாண்டி நிச்சயமாக நாங்கள் மகத்தான வெற்றியைப் பெறுவோம்.

நீதிமன்றம் என்ற ஒன்று உள்ளது. தேர்தல் ஆணையம் இதனைக் கவனத்தில் கொள்ளவேண்டும். தேர்தல் அதிகாரிகள் விதிமுறைகளை மீறினால், தனிப்பட்ட முறையில் வழக்கு தொடுக்கலாம் என்று பல நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே இவை அனைத்தையும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு ஜனநாயக விரோத நடவடிக்கைக்கும்,திமுக அரசும், அவர்களுக்குத் துணைபோகின்ற காவல்துறை, துணை போகின்ற தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பதில் சொல்லவேண்டிய நிலை கண்டிப்பாக ஏற்படும்.

தொடர்ந்து திமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறுகிறார்கள் என்று நீங்கள் ஆணையத்தில் மனு அளித்தோம் ஆளுநரை சந்தித்துள்ளோம் . ஏற்கெனவே ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வழக்குப் போட்டோம், அப்போது ஒரு நல்ல தீர்ப்பை நீதிமன்றம் அளித்தது. இதனை அவர்கள் நடைமுறைப் படுத்தவில்லை. அதன் பிறகு ஆளுநரைச் சந்தித்துள்ளோம்.அவரும் அதற்கு விளக்கம் கேட்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடக்கும் அத்துமீறல்கள், அநியாயங்கள், அனைத்தையும் தொகுத்து ஆளுநரிடமும் அளித்துள்ளோம்.நாங்கள் தெரிவிக்கும் கருத்துக்களைத் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுதான் இருக்கும். இன்றைக்குத் திமுகவுக்கு அதிகாரம் இருக்கிறது என்று அதற்கு அடிபணிந்து, ஜனநாயகத்தை வளைத்து, ஜனநாயகத்தை கேலிகூத்தாக்கும் விஷயத்திலே அரசு அதிகாரிகள் ஈடுபட்டால், கண்டிப்பாக அந்த அதிகாரிகள் நீதிமன்றத்தில் வந்து கூண்டில் நிற்கும் நிலை வரும். நிச்சயமாக நாங்கள் இதனை விடமாட்டோம். இதற்கு மேல் மக்கள் தொடர்ந்து கண்காணித்துவருகிறார்கள். நல்ல தீர்ப்பு என்பது மக்கள்தான். திமுக அராஜகம் செய்கிறது, அதிமுகவினர் ஜனநாயக முறைப்படி நடக்கிறார்கள் என்று மக்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். அவர்களின் குரல் எங்களுக்குப் பெரிய அளவிற்கு சாதகமாக வரும்.

எளிமையின் சிகரம் என்று சொல்லிவிட்டு, திமுகவினர் இன்றைக்குத் தனி விமானம், சொகுசு விமானத்தில் சென்று பிரசாரம் செய்கின்றனர். மக்களை அறிவில்லாதவர்கள் என்று நினைக்கின்ற இயக்கம்தான் திமுக. எதை வேண்டுமானாலும் சொல்லிவிடலாம்.மக்கள் நம்பிவிடுவார்கள் என்பதே அவர்களின் நம்பிக்கை. மக்களை விடச்சிறந்த புத்திசாலிகள் உலகத்திலே யாரும் இருக்க முடியாது. சிறப்பு விமானம் மூலம் ஒரு பயணத்திற்கு 8 லட்சம் ரூபாய் செலவழித்து உதயநிதி பிரச்சாரப் பயணம் செய்து வருகிறார். இதன்மூலம் தேர்தல் விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டு விட்டார்கள். பிரச்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. ஊர்வலம் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் பிரச்சாரத்திற்கு செல்வார், பேரணி நடத்துவார். அவருக்குத் தேர்தல் ஆணையம் ஒத்து ஊதும். போய்விட்டு என்ன செய்கிறார். டீ சாப்பிடுகிறார். டீ சாப்பிட்டால் எளிமையாகிவிடுமா? தேனீர் கடையில் சாப்பிட்டால் எளிமையானவரா? சிறப்பு விமானத்தில் உதயநிதி செல்கிறார் என்றால் அது எளிமையின் சின்னமா?

திமுக நிர்வாகிகளுக்குச் சுயமரியாதை இருக்கக்கூடாது என்று வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் டி.ஆர்.பாலு பேசியுள்ளார். அண்ணா காலத்தில் சுயமரியாதை இருந்தது, புரட்சித்தலைவர் திமுகவில் இருந்தபோது சுயமரியாதை இருந்தது. என்றைக்குத் திமுக என்ற கட்சிக்கு தலைவராக கருணாநிதி வந்தாரோ அன்றே அந்த கட்சி அவருடைய குடும்பத்தின் ஆதிக்கத்தில் வந்துவிட்டது. அதைத்தான், அதன்பிறகு அக்கட்சியில் சுயமரியாதை உடைய யாரும் இருக்க முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. அதைத்தான் டி.ஆர்.பாலு சரியாகச் சொல்லியுள்ளார்.உண்மையை வெளிப்படையாக சொன்ன டி.ஆர்.பாலுவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று பேசியுள்ளார். அது அகில இந்திய அளவில் எடுக்கின்ற ஒரு கொள்கை முடிவு. இது மத்திய அரசின் விஷயம். தேர்தல்களில் மனித உழைப்பு, அதிகாரிகளின் உழைப்பு. செலவுகள் பல மடங்காக ஆகிறது. உள்ளாட்சித் தேர்தலுக்கு ஒரு தேதி, சட்டமன்றத்திற்கு ஒரு தேதி, பாராளுமன்றத் தேர்தலுக்கு ஒரு தேதி என்றால் மிகப்பெரிய அளவில் செலவுகள் ஏற்படுகிறது. ஒரு முறை தேர்தல் நடத்தினால் 300 கோடி செலவாகிறது. ஒரே தேர்தல் நடத்தும்போது பணம் மிச்சமாகும். அந்த கருத்தின் அடிப்படையில் மத்திய அரசு ஒரு முடிவு எடுத்துள்ளது. அதன் அடிப்படையில் அவர் ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார்.இதில் தவறு ஏதும் இல்லை.2014 லில் பாராளுமன்றத் தேர்தல் வருகிறது. அப்படி வரும்போது சட்டமன்றத் தேர்தல் வந்தால் மகிழ்ச்சிதானே. இதில் பயந்து நடுங்குவது திமுகதான். அவர்களுக்கு இப்போது தலைக்கு மேலே கத்தி தொங்கிவருகிறது. எங்களைப் பொறுத்தவரையில் எந்த பயமும் இல்லை என்றார் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!