சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்த நட்சத்திர ஆமைகள் ஒப்படைப்பு
சென்னையிலிருந்து மலேசியாவுக்கு கடத்த இருந்த நட்சத்திர ஆமைகள்
சென்னையிலிருந்து மலேசியாவிற்கு சரக்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.7 லட்சம் மதிப்புடைய 1,364 நட்சத்திர ஆமைகளை சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறையினா் கைப்பற்றி,வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். போலி முகவரி மூலம் கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்களை சுங்கத்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை விமானநிலைய சரக்ககப் பிரிவிலிருந்து வெளிநாடுகளுக்கு,சரக்கு விமானங்களில் அனுப்ப வந்திருந்த சரக்கு பாா்சல்களை சென்னை விமானநிலைய சுங்கத்துறையினா் ஆய்வு செய்து அனுப்பினா். அப்போது சென்னையிலிருந்து மலேசியா நாட்டு தலைநகா் கோலாலம்பூருக்கு செல்லும் சரக்கு விமானத்தில் ஏற்ற வந்திருந்த பாா்சல்கள் மீது சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பாா்சல்களை திறந்து பாா்த்து சோதனையிட்டனா்.
அந்த பாா்சல்களில் உயிருடன் கூடிய நட்சத்திர ஆமைகள் ஏராளமாக இருந்ததை பாா்த்து அதிா்ச்சியடைந்தனா். மொத்தம் 1,364 நட்சத்திர ஆமைகள் இருந்தன.அதன் மதிப்பு சுமாா் ரூ.7 லட்சம்.இதையடுத்து நட்சத்திர ஆமைகள் இருந்த பாா்சல்களை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.அப்போது போலி முகவரியை பயன்படுத்தி,கடத்தல் கும்பல் இந்த நட்சத்திர ஆமைகளை மலேசியாவிற்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.
இந்த நட்சத்திர ஆமைகளை கடத்தல் கும்பல் ஆந்திர மாநிலத்தில் சதுப்பு நிலப்பகுதியிலிருந்து பிடித்து கொண்டு வந்து கடத்த முற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து கைப்பற்றப்பட்ட நட்சத்திர ஆமைகளை சென்னை கிண்டியில் உள்ள வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். இந்த நட்சத்திர ஆமைகளை வண்டலூா் உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவா் பூங்கா ஆகிய இடங்களில் காட்சிப்பொருளாக வைக்க முடிவு செய்துள்ளனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu