தமிழக மாணவர்களுக்கு கல்விக்கடன்; மத்திய, மாநில அரசுக்கு ராமதாஸ் வேண்டுக்கோள்
பாமக நிறுவனர் ராம்தாஸ்-பைல் படம்
தமிழக மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்குவது குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் கல்விகடன் வழங்க பொதுத்துறை வங்கிகள் தயங்குகிறது. கொரோனா பாதிப்பால் பெற்றோர்களின் சராசரி வருமானம் குறைந்திருப்பது உண்மை தான் என்றாலும், தற்காலிக பின்னடைவை காரணம் காட்டி, குழந்தைகளின் கல்வி வாய்ப்பை பறிப்பது நியாயமற்றதாகும்.
இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில், உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் முதலிடத்தில் உள்ள மாநிலம் தமிழகம் தான். இந்தியாவில் ஒட்டுமொத்தமாக வழங்கப்பட்டுள்ள ரூ.94,000 கோடி கல்விக் கடனில், 21.50% அதாவது ரூ.20,200 கோடி தமிழக மாணவர்களுக்குத் தான் வழங்கப்பட்டுள்ளது. கல்விக்கடன்களைப் பெறுவதிலும் தமிழகம் தான் முதலிடம் வகித்து வருகிறது.
நடப்பாண்டில் தமிழகத்தில் வழங்கப்பட்ட கல்விக்கடனின் அளவு வெகுவாக குறைந்திருக்கிறது. 2019-20 ஆம் ஆண்டில் தமிழகத்தில் ரூ.2420 கோடி கடன் வழங்கப்பட்ட நிலையில், கடந்த நிதியாண்டில் அது ரூ.1478 கோடியாக குறைந்து விட்டது. இது 39% வீழ்ச்சி ஆகும். கடந்த ஆண்டில் சுமார் 40 விழுக்காட்டினருக்கு கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருப்பதையே இந்த புள்ளிவிவரம் காட்டுகிறது. இதே நிலை நீடித்தால் நடப்பாண்டில் கல்விக் கடன் அளவு மேலும் குறையும். இன்னும் அதிக எண்ணிக்கையிலானவர்கள் கட்டணம் செலுத்த முடியாமல் உயர்கல்வி கற்கும் வாய்ப்பை இழப்பார்கள். அது மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.
12ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டு விட்டன. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் அடுத்த சில நாட்களில் வெளியிடப்படவுள்ளன. அவற்றில் அதிக மதிப்பெண் பெற்று உயர்கல்வி வாய்ப்பு பெறும் மாணவ, மாணவிகள் அவற்றை பயன்படுத்திக் கொள்வது வங்கிகள் வழங்கும் கல்விக்கடனைப் பொறுத்தே உள்ளது.
எனவே, வங்கிகள் எந்தத் தயக்கமும் இல்லாமல் நடப்பாண்டில் அதிக எண்ணிக்கையில் கல்விக்கடன்களை வழங்க வேண்டும். வங்கிகளுக்குத் தேவையான உத்தரவாதத்தை அளித்து, எந்த மாணவருக்கும் வருமானம் குறைவு போன்ற காரணங்களைக் காட்டி கல்விக்கடன் மறுக்கப்படாமல் வழங்கப்படுவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu