ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: போலீசார்மீது கொலை வழக்குபதிய வேண்டும்-வைகோ

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: போலீசார்மீது கொலை வழக்குபதிய வேண்டும்-வைகோ
X

வைகோ

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வைகோ வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 13 பேரைச் சுட்டுக்கொன்ற காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டை உலுக்கிய அந்த நிகழ்வு நடந்து, மூன்று ஆண்டுகள் ஆகின்றன. நாளை இதே நாளில்தான், தூத்துக்குடியில் 13 அப்பாவித் தமிழர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களை சுட்டுக்கொன்ற அந்தக் குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற அப்பாவி வணிகர்களை அடித்துக் கொன்ற காவல்துறையினர் மீது, கொலைக் குற்ற வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும் என நான் அறிக்கை விடுத்தேன். அதன்படியே, கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர். வழக்கு நடைபெறுகின்றது.

அதேபோல், ஸ்டெர்லைட் ஆலைக்காக, 13 பேரைச் சுட்டுக்கொன்ற காவலர்கள் மீதும், கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அவர்களைக் கைது செய்ய வேண்டும். அப்பொழுதுதான், இறந்தவர்களுக்கு நீதி கிடைக்கும்.

தூத்துக்குடி மண்ணையும் மக்களையும் காக்க, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடி, தங்கள் இன்னுயிர்களை ஈந்த போராளிகளுக்கு, வீர வணக்கம் செலுத்துவோம்!". இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!