திருவொற்றியூர் ஸ்ரீ கல்யாணசுந்தரர்-திரிபுரசுந்தரி அம்மன் திருக்கல்யாணம்

திருவொற்றியூர்  ஸ்ரீ கல்யாணசுந்தரர்-திரிபுரசுந்தரி அம்மன் திருக்கல்யாணம்
X

திருவொற்றியூரில் நடைபெற்ற ஸ்ரீ கல்யாணசுந்தரர்-திரிபுரசுந்தரி அம்மன் திருக்கல்யாணம்

திருவொற்றியூர் தியாகராஜசுவாமி திருக்கோயில் மாசி பிரம்மோற்சவ பெருவிழா கடந்த பிப்.26 கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருவொற்றியூரில் நடைபெற்ற ஸ்ரீ கல்யாணசுந்தரர்-திரிபுரசுந்தரி அம்மன் திருக்கல்யாண வைபவத்தில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜசுவாமி திருக்கோயில் மாசி பிரம்மோற்சவத் திரு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீ கல்யாணசுந்தரர் - திரிபுர சுந்தரி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு திருக்கல்யாண நிகழ்வினைக் கண்டுகளித்தனர்.

தமிழகத்தின் மிகப் பழமையான திருக்கோயில்களில் ஒன்றான திருவொற்றியூர் தியாகராஜசுவாமி திருக்கோயில் மாசி பிரம்மோற்சவ பெருவிழா கடந்த பிப்.26 ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு பல்லக்குகளில் ஸ்ரீ சந்திரசேகரர் வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருக்கல்யாண நிகழ்ச்சி: பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீ கல்யாணசுந்தரர்-திரிபுரசுந்தரி அம்மன் திருக்கல்யாணம் திங்கள்கிழமை நடைபெற்றது. காலை 9.30 மணிக்குத் தொடங்கிய திருமண நிகழ்ச்சிகள் 10.30 மணி வரை நடைபெற்றது.

திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். கோயில் நிர்வாகத்தின் சிறப்பு ஏற்பாட்டின் பேரில் சமூக வலைத் தளங்கள் மூலம் திருக்கல்யாண நிகழ்ச்சி நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.



ஸ்ரீ கல்யாணசுந்தரர்-திரிபுரசுந்தரி அம்மன் திருக்கல்யாணம் மற்றும் திருக்கல்யாணத்தை காண்பதற்காக காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்.

மாசி பெருவிழாவினையொட்டி கடந்த ஒரு வாரமாக நகரத்தார் சங்கம் சார்பில் தெற்கு மாடவீதியில் உள்ள நாட்டுக் கோட்டை சத்திரத்தில் தொடர் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. திருக்கல்யாண நிகழ்வினை யொட்டி சிறப்பு விருந்து வைபோகம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பக்தர்கள் உணவருந்திவிட்டு திருமண மொய் என்ற பெயரில் காணிக்கை செலுத்தினர். மேலும் திருவொற்றியூர் தேரடி, நான்கு மாடவீதிகள் விழாக் கோலம் பூண்டிருந்தது. ஆங்காங்கே தயிர்சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்றவை உணவு வகைகள் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன. பல்வேறு இடங்களில் மோர்ப் பந்தல், தண்ணீர் பந்தல்கள் உள்ளிட்டவைகளுக்கு பொதுநல அமைப்புகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

மகிழடி சேவை: இதனையடுத்து சுந்தரமூர்த்தி நாயனார்-சங்கிலிநாச்சியார் ஆகியோருக்கு திருமண கோலத்தில் கல்யாண சுந்தரர்-திரிபுரசுந்தரி மகிழ மரத்தடியில் காட்சியளிக்கும் மகிழடி சேவை நிகழ்ச்சியும், குழந்தை ஈஸ்வரரை தரிசிக்கும் நிகழ்ச்சியும் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரவு அறுபத்து மூவர் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.

திருக்கல்யாண நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் எம்.பாஸ்கரன் தலைமையில் ஊழியர்கள், சேவார்த்திகள், உபயதாரர்கள் செய்திருந்தனர். காவல் துறை சார்பில் உதவி ஆணையர் முகம்மது நாசர், ஆய்வாளர் காதர் மீரா தலைமையில் இருநூறுக்கும் மேற்பட்ட போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil