ஸ்டான்லி மருத்துவமனையில் ஓராண்டில் சுமார் 3 லட்சம் சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சை

ஸ்டான்லி மருத்துவமனையில் ஓராண்டில் சுமார் 3 லட்சம் சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சை
X

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தின நிகழ்ச்சியில் நோயாளிகளுக்கு குளூகோமீட்டர்களை வழங்கிய வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ஆண்டுக்கு சுமார் 3 லட்சம் சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என மருத்துவமனை டீன் டாக்டர் பி.பாலாஜி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

சார்லஸ் ஹெர்பர்ட் பெஸ்டுடன் இணைந்து இன்சுலினைக் கண்டுபிடித்த பிரெடிரிக் பாண்டிங்கின் பிறந்த நாளான நவ.14-ம் தேதி உலக சர்க்கரை நோய் தினமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 'சுகாதாரப் பாதுகாப்புக்கான அணுகல்' என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நீரிழிவு நோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஸ்டான்லி மருத்துக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் பி.பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேரணியைத் தொடங்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இந்நோய் குறித்து விளக்கவுரை நிகழ்த்தப்பட்டது. மேலும் நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவினைக் கண்டறியும் குளூகோமீட்டர் கருவிகளை டாக்டர் கலாநிதி வீராசாமி இலவசமாக வழங்கினார்.

3 லட்சம் பேருக்குச் கிசிச்சை: விழிப்புணர்வு தினம் குறித்து டாக்டர் பி.பாலாஜி கூறியதாவது: தொற்றா நோய்களில் ஒன்றான சர்க்கரை நோயின் தாக்கம் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. வகை 2 அடிப்படையிலான சர்க்கரை நோய்க்கு பல்வேறு காரணிகள் இருந்தாலும் மாறி வரும் உணவுப் பழக்கம் மற்றும் வாழ்வியல் நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே முக்கிய காரணியாக உள்ளது. எனவே சமச்சீரான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, உடலுழைப்பு போன்றவற்றால் இந்நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

ஐசிஎம்ஆர் தரவுகளின் படி இந்தியா முழுவதும் சுமார் 10 கோடி பேரும், இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 60 லட்சம் பேரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு சுமார் 3 லட்சம் சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்துகள், இன்சுலின் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. ஸ்டான்லி மருத்துவமனையில் சர்க்கரை சிகிச்சை பிரிவு தற்போது தனி இயக்குனரகமாகச் செயல்பட்டு வருகிறது என்றார் பாலாஜி.

நிகழ்ச்சியில் ராயபுரம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் ஐட்ரீம் ஆர்.மூர்த்தி, மாநகராட்சி நகரமைப்புக் குழு தலைவர் இளைய அருணா, மண்டலக் குழு தலைவர் ஸ்ரீராமுலு, நீரிழிவு மைய இயக்குனர் டாக்டர் சுரேஷ், உறைவிட மருத்துவ அதிகாரி வனிதாமலர், கல்லூரி துணை முதல்வர் டாக்டர் ஜமீலா, நீரிழிவு சிறப்பு மருத்துவர்கள் ரஞ்சித், சார்லஸ், ஜெயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!