சென்னைத் துறைமுகத்திற்கு ஒட்டுமொத்த செயல்திறனுக்கான சிறப்பு விருது
கடந்த நிதியாண்டில் சென்னைத் துறைமுகத்தின் ஒட்டுமொத்த செயல்திறனுக்கான சிறப்பு விருதினை புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னைத் துறைமுகத் துணைத் தலைவர் எஸ்.விஸ்வநாதனிடம் வழங்கிய மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால். உடன் இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் மற்றும் சென்னைத் துறைத் தலைவர்கள் உள்ளனர்.
சென்னை துறைமுகத்திற்கு ஒட்டுமொத்த செயல்திறனுக்கான சிறப்பு விருதைகப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் வழங்கியது.
சென்னைத் துறைமுகத்திற்கு 2022-23 நிதியாண்டின் ஒட்டுமொத்த செயல் திறனுக்கான சிறப்பு விருதினை (Sagar Shreshtha Sammaan) மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் புதன்கிழமை புதுதில்லியில் வழங்கினார்.
இது குறித்து சென்னைத் துறைமுக நிர்வாகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:நாட்டில் உள்ள துறைமுகங்களை பசுமைத் துறைமுகங்களாக மாற்றுவதற்கான 'ஹரித் சாகர்' என்ற சிறப்புத் திட்டத்தை புதுதில்லியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான பல்வேறு வழிகாட்டுதல்களை அமைச்சர் வெளியிட்டார். இதன்படி திட்டமிட்ட வளர்ச்சி இலக்குகளை எட்டுதல், துறைமுக செயல்பாடுகளில் கரியமில வாயுவின் உபயோகத்தை குறைப்பது, துறைமுக உபயோகிப்பாளர்கள், துறைமுக முனையங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் இணைந்து துறைமுக வளாகத்தில் சுற்றுச்சூழலை மேம்படுத்துதல், பசுமை தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல், அனைத்து விதமான எரிசக்தி விரயங்களையும் குறைத்தல் உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் இத்திட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளன.
துறைமுகங்கள் கடைப்பிடிக்க வேண்டிய 16 பரிந்துரைகள்:
மரங்களை வளர்த்து பசுமை போர்வையை ஏற்படுத்துதல், வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களையும் மின்மயமாக்குதல், கைவினைப் பொருள்களை பயன்படுத்துதல், புதுப்பிக்கத் தக்க ஆற்றல் பயன்பாடு, கரையிலிருந்து கப்பல்களுக்கு மின்சாரம் வழங்கல், இயற்கை வளங்களை பயன்படுத்துதல், திறன்கொண்ட உபகரணங்களை பயன் படுத்தல், கடலோரக் கப்பல் போக்குவரத்தை ஊக்குவித்தல், கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் மேலாண்மை, கடல்சார் சுற்றுச் சூழல், கரியமிலவாயுவைக் கட்டுப் படுத்துதல், ஊக்கப்படுத்தும் பணிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற் கான சட்டங்கள் மற்றும் விதிகளை அமல்படுத்துதல், சுற்றுச்சூழல் செயல்திறன் குறிகாட்டிகள் உள்ளிட்ட 16 வகையான பரிந்துரைகளை துறைமுக நிர்வாகங்கள் தொடர்ந்து செயல்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் அனைத்து துறை முகங்களும் பசுமைத் துறைமுகங்களாக மாறும் என அமைச்சர் சோனோவால் தெரிவித்தார்.
சென்னைத் துறைமுகத்திற்கு சிறப்பு விருது:
இந்நிகழ்ச்சியில் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் சார்பில் கடந்த நிதியாண்டின் ஒட்டு மொத்த செயல் திறனுக்கான (Sagar Shreshtha Sammaan) விருதை சென்னைத் துறைமுகத்தின் துணைத்தலைவர் எஸ்.விஸ்வநாதன் மற்றும் துறைத் தலைவர்களிடம் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் வழங்கினார். இந்த விருது வழங்கப்பட்டுள்ளதன் மூலம் துறைமுக அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் மேலும் பல்வேறு சாதனைகளைப் படைத்திட இந்த விருது ஊக்கமாக இருக்கும் எனவும் இச்சாதனையை எட்டுவதற்கு உறுதுணையாக இருந்த துறைமுக ஊழியர்கள், துறைமுக உபயோகிப்பாளர்கள் அனைவரின் ஆதரவும் சென்னைத் துறைமுகம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் வழிநடத்தப்படும் என துறைமுகத் துணைத்தலைவர் எஸ். விஸ்வநாதன் தெரிவித்தார் என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu