சென்னை மாநகராட்சி உருது பள்ளி மாணவர்களுக்கு ரூ.15 லட்சத்தில் நலத்திட்ட உதவி

சென்னை மாநகராட்சி உருது பள்ளி மாணவர்களுக்கு ரூ.15 லட்சத்தில் நலத்திட்ட உதவி
X

சென்னை ராயபுரத்தில் உள்ள மாநகராட்சி உருது பள்ளியில் சுமார் ரூ.15 லட்சம் மதிப்புள்ள மாணவர்களுக்கான உபகரணங்களை வியாழக்கிழமை வழங்கிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.செஞ்சி மஸ்தான் . உடன் வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டப் பேரவை உறுப்பினர் ஐட்ரீம் ஆர்.மூர்த்தி, மாநகராட்சி நகரமைப்பு நிலைக் குழு தலைவர் த.இளைய அருணா, தொண்டு நிறுவன தலைவர் இசாக் பாய் சாப் உள்ளிட்டோர் உள்ளனர்.

welfare assistance to Chennai Corporation Urdu school students

சென்னை ராயபுரத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.15 லட்சம் செலவில் உபகரணங்களை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ். செஞ்சி மஸ்தான் வியாழக்கிழமை வழங்கினார்.

சென்னை ராயபுரம் அரத்தூன் சாலையில் மாநகராட்சி உருது தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 350 மாணவர்கள் பயின்று வருகின்றனர். சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்டு வரும் இப்பள்ளி 60 ஆண்டுகளுக்கும் மேலான பழைமையைக் கொண்டது.இப்பள்ளிக்கு தமிழக முதல்வரின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி கல்வி உபகரணங்களை வழங்கும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கே.எஸ்.செஞ்சி மஸ்தான் பள்ளி மாணவர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கினார். அப்போது, எழுதும் வசதி கொண்ட 100 இருக்கைகள், ஒவியம் தீட்டுவதற்கான 20 மேசைகள், பல்வேறு தலைப்புகளிலான 200 புத்தகங்கள், விளையாட்டு பயிற்சிக்கான 250 பொம்மைகள், மாணவர்கள் மதிய உணவு சாப்பிடுவதற்காக 350 சாப்பாட்டு தட்டுகள் உள்ளிட்டவைகளை மாணவர்களிடம் அமைச்சர் மஸ்தான் வழங்கினார். மேலும் பள்ளியில் சிறப்பாசிரியர்களாக பணியாற்றும் ஏ.ஆனந்தி. ஏ சிரீன் ஆகியோருக்கு தலா 30,000 ஊக்கத்தொகையையும் அமைச்சர் வழங்கினார்.

மேலும் தொண்டு நிறுவனம் சார்பில் சீரமைக்கப்பட்ட 4 கழிப்பிடங்கள், சீரமைக்கப்பட்ட வகுப்பறைகளை பார்வையிட்ட அமைச்சர், நிகழ்ச்சியின் நினைவாக மரக்கன்று ஒன்றையும் நடவு செய்தார்.பழைமையான இப்பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரும், சட்டப் பேரவை உறுப்பினரும் பள்ளி நிர்வாகிகளிடம் ஆசிரியர்களிடமும் உறுதி அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, ராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஐட்ரீம் ஆர்.மூர்த்தி, மாநகராட்சி நகரமைப்பு நிலைக்குழு தலைவர் த.இளைய அருணா, மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார், தலைமை ஆசிரியை அத்தர் பேகம், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முஸ்தபா, தொண்டு நிறுவன நிர்வாகிகள் இசாக் பாய் சாப், அப்பாஸ் பாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!