எண்ணூர் கிளை நூலகத்திற்கு ரூ 1 கோடி செலவில் புதிய கட்டடம்

எண்ணூர் கிளை நூலகத்திற்கு ரூ 1 கோடி செலவில் புதிய கட்டடம்
X

எண்ணூர் கிளை நூலகத்திற்கு ரூ.1 கோடியில் அமைய உள்ள புதிய கட்டடத்திற்கு  அடிக்கல் நாட்டிய திருவொற்றியூர் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர்.

எண்ணூரில் 1962- ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சராக இருந்த பக்தவச்சலத்தால் திறந்து வைக்கப்பட்ட கிளை நூலகம் இயங்கி வருகிறது.

எண்ணூர் கத்திவாக்கம் அரசு கிளை நூலகத்திற்கு ரூ.1 கோடி செலவில் புதிய கட்டடம் அமைப்பதற்கு திருவொற்றியூர் எம்.எல்.ஏ.கே பி சங்கர் புதன்கிழமை அடிக்கல் நாட்டினார்.

அசோக் லேலண்ட், எண்ணூர் அனல் மேல் நிலையம உள்ளிட்ட பல்வேறு கனரக தொழிற் சாலைகள் நிறைந்த எண்ணூரில் 1962- ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சராக இருந்த பக்தவச்சலத்தால் திறந்து வைக்கப்பட்ட கிளை நூலகம் இயங்கி வருகிறது. இந்நூலகத்தில் தற்போது சுமார் 5,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். சுமார் 50,000 புத்தகங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்நூலகத்தின் கட்டடம் பழுதடைந்துள்ள நிலையில் புதிய வசதிகளை ஏற்படுத்துவதற்கும் கூடுதல் புத்தகங்களை இருப்பு வைப்பதற்கும் இயலாத நிலை உள்ளது,

இதனை கருத்தில் கொண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை எண்ணூர் கத்திவாக்கத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருவொற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே பி சங்கர் புதிய கட்டடம் அமைப்பதற்கான சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு அடிகல்லை நாட்டினார். அப்போது புதிய கட்டடம் அமைக்கப்படுவதோடு மேலும் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கணினி பிரிவு, குளிர் சாதன வசதிகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை அமைத்திட தனது சொந்த நிதியிலிருந்தும், நன்கொடை யாளர்கள் மூலமாகவும் வழங்கிட உள்ளதாக கே.பி .சங்கர் தெரிவித்தார்.

12 சிறப்பு பிரிவுகள்:

புதிய நூலக கட்டடம் குறித்து மாவட்ட நூலக அதிகாரி ஜி.திருஞானசம்பந்தம் கூறியது,

புதிதாக கட்டப்படவுள்ள இந்நூலக கட்டடத்தில் மாற்று மாற்று திறனாளிகள் சிறப்பு பிரிவு, சொந்த நூல்களை படிக்கும் பிரிவு எண்ம நூலகம், குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம், சிறுவர் பிரிவு, மகளிர் பிரிவு உள்ளிட்ட 12 சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட உள்ளன.

மேலும் தற்போது இந்த நூலகத்தில் உள்ள வாசகர்களின் எண்ணிக்கையை 5 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரம் ஆக உயர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நூலகத்தின் வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் சேமிப்பு நிதி புரவலர்கள் மூலமாகத் திரட்டப்படும். வாசிப்பு இயக்கம் மூலம் மாணவர் களையும், இளைஞர்களையும் நூலகத்தின் உறுப்பினராக சேர்ப்பதில் நூலகத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

நூலக நண்பர்கள் திட்டம், வீடுகளுக்கே சென்று புத்தகங்களை தன்னார்வலர்கள் மூலம் வழங்குவது உள்ளிட்ட திட்டங்கள் மூலம் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாணவர்களுக்கு பேச்சு, ஓவியம், கட்டுரை, திருக்குறள் வாசித்தல் உள்ளிட்ட போட்டி களை தொடர்ந்து நடத்தி வருகிறோம். புதிய கட்டடம் அமையும் போது இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் இவ்வசதிகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றார் திருஞானசம்பந்தம்.

இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் கே பி சொக்கலிங்கம் எஸ் கோமதி, மாநகராட்சி செயற்பொறியாளர் தணிகைவேல். உதவி பொறியாளர் ஜெயக்குமார், நூலகர் பாணிக் பாண்டியன், வாசகர் வட்ட நிர்வாகிகள் குரு.சுப்பிரமணி, எம்.மதியழகன், சி.செல்வம், திமுக நிர்வாகிகள் வி.ராமநாதன், ஆர்.டி.மதன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!