எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் நவீன விளையாட்டுத் திடல்: எம்பி கலாநிதிவீராச்சாமி

எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் தனியார் நிறுவனம் சார்பில் தூர்வாரி சீரமைக்கப்பட்ட குளத்தை பார்வையிட்ட வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி
எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் நவீன விளையாட்டுத் திடல் அமைக்கப்படும் என வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் அன்னை சிவகாமி நகர் அமைந்துள்ளது. சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பர்மாவிலிருந்து (தற்போதைய மியான்மர்) நாடு திரும்பிய தமிழர்கள் ஆவார்கள்.
இவர்கள் குடியமர்த்தப்பட்ட பகுதி ரயில்வே துறைக்குச் சொந்தமானது என்பதால் சாலை, தெருவிளக்கு, பாதாளச் சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தருவதில் தொடர்ந்து சிக்கல் இருந்து வந்தது. இருப்பினும் அவ்வப்போது ரயில்வே அமைச்சகத்தின் தடையில்லாச் சான்றுகளைப் பெற்று அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வந்தது.
இந்நிலையில் இந்நகரை ஒட்டி அமைந்துள்ள காலி இடத்தில் விளையாட்டுத் திடல் இருக்கிறது. இதனை நவீன விளையாட்டுத் திடலாக அமைத்துத் தருவதற்கு மாநகராட்சி நிர்வாகம் முன்வந்தது. இருப்பினும் ரயில்வே இடம் என்பதால் விளையாட்டுத் திடல் அமைப்பதில் தொடர்ந்து சிக்கல் இருந்து வருகிறது.
ரயில்வே அனுமதியுடன் விளையாட்டுத் திடல்:இந்நிலையில் விளையாட்டுத் திடல் அமைக்கப்பட உள்ள வட சென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி வெள்ளிக்கிழமை பார்வையிட்டார். ரயில்வே அமைச்சகத்தின் தடையில்லாச் சான்று விரைவில் பெறப்பட்டு நவீன விளையாட்டுத் திடல் அமைக்கப்படும் என டாக்டர் கலாநிதி தெரிவித்தார்.
பின்னர் தனியார் நிறுவனம் சார்பில் தூர்வாரி சீரமைக்கப்பட்ட குளத்தைப் பார்வையிட்டார். அப்போது இக்குளத்தை மேலும் தூர்வாரி படகு குழாம் அமைத்திடும் சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு நடத்தும்படி மாநகராட்சி அதிகாரிகளை கலாநிதி கேட்டுக் கொண்டார்.
ஆய்வின்போது சட்டப் பேரவை உறுப்பினர்கள் எஸ்.சுதர்சனம் (மாதவரம்), கே.பி.சங்கர் (திருவொற்றியூர்), மண்டலக் குழு தலைவர் தி.மு. தனியரசு, மாமன்ற உறுப்பினர் தமிழரசன், திமுக பகுதி செயலாளர் வை.மா. அருள்தாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu