காசிமேடு, திருவொற்றியூர் மீன்பிடி துறைமுகங்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு நடத்திய போது. உடன் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள்.
மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக காசிமேடு துறைமுகத்தில் இன்று (புதன்கிழமை) விரிவான ஆய்வு நடவடிக்கைகள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மேற்கொண்டார். படகுகள் இறங்கும் தளம், சாலைகள், மீன் ஏல மையம், பழுது நீக்கும் வசதிகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளைப் பார்வையிட்டு அதிகாரிகளிடம் அமைச்சர் ராதாகிருஷ்ணன் விபரங்களைக் கேட்டறிந்தார். அப்போது பல்வேறு மீனவர் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தங்களது கோரிக்கை மனுவாக அமைச்சரிடம் வழங்கினர்.
மீன்பிடித் துறைமுகம் அமைந்துள்ள பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க வேண்டும், முறையாக கழிவு நீர் மற்றும் குப்பைகளை முறையாக அகற்றி சுகாதாரத்தைப் பேணி காக்க வேண்டும். குடிநீர், கழிப்பிடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். மீனவர்களை வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகியில் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தை மீன்வளப் பூங்காவாக மாற்றியமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து அமைச்சரிடம் மீனவர்கள் விளக்கிக் கூறினர். இது குறித்து கேட்டறிந்த அமைச்சர் ராதாகிருஷ்ணன் வரும் நிதிநிலை அறிக்கை, மானியக் கோரிக்கையின்போது மீனவர்கள் கோரிக்கைகள் குறித்து நிச்சயம் அறிவிப்பு வெளியிடப்படும் என உறுதி அளித்தார்.
இதில் இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை பி.கே.சேகர்பாபு, சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஜெ.ஜெ.எபினேசர், கே.பி.சங்கர், தி.மு.க. மாவட்டச் செயலாளர் இளைய அருணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவொற்றியூரில் ஆய்வு:
இதனையடுத்து திருவொற்றியூரில் ரூ. 200 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் ஆழ்கடல் மீன்பிடித் துறைமுகத்தை அமைச்சர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். அப்போது மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் திட்டப்பணிகள் தற்போதுவரை முடிக்கப்பட்டுள்ள பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். மேலும் மீதம் உள்ள பணிகளை உடனடியாக முடித்து விரைவாக துறைமுகத்தைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வர அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது திமுக மாவட்டச் செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்.எல்.ஏ., திருவொற்றியூர் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர், பகுதி செயலாளர் தி.மு.தனியரசு, திமுக நிர்வாகிகள் குறிஞ்சி கணேசன், எம்.எல்.சரவணன், கே.பி.சொக்கலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu