எண்ணெய் கழிவுகளை அகற்றுவதில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்

எண்ணெய் கழிவுகளை அகற்றுவதில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்
X

எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்ட எண்ணூர் முகத்துவாரப் பகுதியை ஞாயிற்றுக்கிழமை படகில் சென்று ஆய்வு செய்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன்

எண்ணெய் கழிவுகளை அகற்றுவதில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்றார் மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன்

எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் கலந்து உள்ள எண்ணெய் கழிவுகளை அகற்றுவதில் நவீன தொழில்நுட்ப கருவிகளுடன் நிபுணத்துவம் பெற்ற பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தெரிவித்தார்.

எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் எண்ணெய் கழிவுகளால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார். பின்னர் பாதிக்கப்பட்ட மீனவ மக்களை சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படும் நிவாரண உதவிகள் குறித்து கேட்டறிந்தார் .

பின்னர் கமலஹாசன் செய்தியாளர்களிடம் கூறியது: எண்ணெய் கழிவுகளால் பல ஆண்டுகளாக இப்பகுதி சீரழிந்து வருகிறது. தற்போது எண்ணூர் முத்துவாரப் பகுதியில் கலந்துள்ள எண்ணெய் கழிவுகளை அகற்றுவதில் மீனவர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அதுவும் வாளிகள் மூலம் எண்ணெய் படலங்களை அகற்றும் பணியை அரசு செய்து வருகிறது. இது போதுமானது அல்ல. எண்ணெய் கழிவுகளை அகற்றுவதில் நவீன தொழில்நுட்ப இயந்திரங்களைக் கொண்டு நிபுணத்துவம் பெற்ற பணியாளர்களையும் இதில் ஈடுபடுத்தி முழுமையாக எண்ணெய் படலங்களை அகற்ற வேண்டும்.

சந்திரனுக்கு ராக்கெட்டை அனுப்பி சோதனை நடத்தியுள்ள நமது நாட்டில் எண்ணெய் கழிவுகளை அகற்றுவதற்கு உரிய தொழில்நுட்பங்கள் கிடையாதா? புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தவில்லை எனில் இன்னும் நான்கு வாரங்கள் ஆனாலும் எண்ணெய் கழிவுகளை அகற்ற முடியாது. இப்போது வரை எண்ணெய் கழிவுகள் கலந்ததற்கு யார் காரணம் என எந்த நிறுவனமும் வெளிப்படையாக பொறுப்பேற்கவில்லை.

எனவே மக்களை பாதிக்கும் இக்கொடுஞ்செயலுக்குக் காரணமாக இருந்த நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நிவாரண பணிகள் தூர் வாரும்பணிகள் உள்ளிட்ட அனைத்திற்குமான செலவுகளை அந்த நிறுவனமே ஏற்கச் செய்ய வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாது. எனவே வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு உரிய நிவாரணத்தை அளித்து அவர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டும் என்றார் கமலஹாசன்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil