காசிமேட்டில் ரூ. 6.50 கோடியில் வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் புதிய வீடுகள்
ஆர்.கே.நகர் சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீட்டு ஆணை மற்றும் ரூ.24 ஆயிரம் ரொக்க பணத்தை வழங்கினார்.
காசிமேட்டில் ரூ. 6.50 கோடியில் வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் புதிய வீடுகள் கட்ட முடிவு செய்து பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்து உத்தரவுகள் வழங்கப்பட்டன.
சென்னை காசிமேட்டில் ஏற்கெனவே வசித்து வந்த வீடுகளை இடித்துவிட்டு ரூ.6.50 கோடி செலவில் 64 புதிய வீடுகளை கட்டுவதற்கு தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் முடிவு செய்து பயனாளிகளுக்கு இதற்கான ஒதுக்கீட்டு ஆணைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
சென்னை காசிமேடு பவர் குப்பம் பகுதியில் தலா மூன்று தளங்கள் கொண்ட இரண்டு கட்டடங்களில் 64 குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றன. சுமார் 27 ஆண்டுகள் பழமையான வீடுகள் அனைத்தும் சிதிலடைந்து சேதமுற்று இடிந்து விழும் நிலையில் இருந்து வருகிறது. இது குறித்து இங்கு வசிக்கும் மக்களின் கோரிக்கையை ஏற்று பழைய வீடுகளை இடித்து அகற்றி விட்டு புதிய வீடுகளை இதே இடத்தில் கட்டி தருவதற்கு தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் முடிவு செய்தது.
மழைக்காலத்திற்கு முன்பாக கட்டடப் பணிகளை தொடங்குவதற்கு ஏதுவாக இங்கு வசிக்கும் மக்கள் வீடுகளைக் காலி செய்துவிட்டு வாடகை வீடுகளில் தங்குவதற்காக ரூ. 24 ஆயிரம் மற்றும் வீடுகளை ஒதுக்கீடு செய்வதற்கான ஆணை உள்ளிட்டவைகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் கோவிந்தராவ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஆர்.கே.நகர் சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீட்டு ஆணை மற்றும் ரூ.24 ஆயிரம் ரொக்க பணத்தை வழங்கினார்.
இரண்டு மாதங்களில் பழைய வீடுகள் இடிக்கப்பட்டு புதிய வீடுகளை அடுத்த ஓராண்டிற்குள் அமைத்திட முடிவு செய்யப் பட்டுள்ளதாகவும், சராசரி வீட்டின் பரப்பளவு 221 சதுர அடி எனவும், இதற்கான தோராய திட்ட மதிப்பீடு ரூபாய் 6.50 கோடி எனவும் வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் நேதாஜி யு.கணேசன், மாமன்ற உறுப்பினர் பவித்ரா நாகராஜன், வாழ்விட மேம்பாட்டு வாரிய செயற்பொறியாளர் சுடலை முத்துக்குமார், உதவி பொறியாளர் சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu