எண்ணெய்க் கழிவு ஆற்றில் கலந்த பிரச்னை குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்
சிறப்பு பொது மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பெண் ஒருவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்
எண்ணெய்க் கழிவு ஆற்றில் கலந்த பிரச்னை குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்:டாக்டர் அன்புமணி ராமதாஸ்.
சென்னை எண்ணூரில் எண்ணெய்க் கழிவுகள் கலந்ததால் ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழுவோ அல்லது ஆணையமோ அமைத்து உயர்மட்ட விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் செவ்வாய்க்கிழமை சென்னையில் தெரிவித்தார்.
சென்னை எண்ணூர் முகத்துவார பகுதியில் கலந்த எண்ணெய்க் கழிவுகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பசுமைத்தாயகம் தன்னார்வ அமைப்பு சார்பில் எண்ணூர் நேரு நகரில் உள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் பரிசோதனையை மேற்கொண்டு மருத்துவ சிகிச்சை அளித்தார். மேலும் மறைந்த டாக்டர் ஜெயச்சந்திரன் நினைவு மருத்துவமனை சார்பில் டாக்டர் சரத்ராஜ் ஜெயச்சந்திரன் தலைமையில் மருத்துவர்கள் குழு பங்கேற்று மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனர். முகாமில் இருதயம், நுரையீரல், தோல், கண், பல் உள்ளிட்ட உடலுறுப்புகளில் ஏற்பட்டுள்ள பல்வேறு நோய் பாதிப்புகள் குறித்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டன.
நீதி விசாரணை வேண்டும்:அப்போது அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியது:
எண்ணூர் பகுதியில் எண்ணெய் மற்றும் ரசாயன கழிவுகள் கலந்ததிற்கான காரணம் குறித்து எந்த ஒரு நிறுவனமும் பொறுப்பேற்கவில்லை. மேலும் இப்பிரச்னை குறித்து இதுவரை விரிவான ஆய்வோ அல்லது முழுமையான விசாரணை யையோ தமிழக அரசு நடத்தவில்லை. பொதுமக்கள் மட்டுமல்லாது கால்நடைகள், பறவைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. எண்ணெய்க் கழிவுகளை அகற்றுவதில் உரிய தொழில்நுட்பங்களோ, நவீன கருவிகளோ பயன்படுத்தப்படவில்லை.
காலநிலை மாற்றம் காரணமாக ஒவ்வொரு பருவமழை காலத்தின்போது வெள்ளப் பெருக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் சென்னையை தாக்கும் வகையில் மீண்டும் ஒரு பெருவெள்ளம் ஏற்படலாம். எனவே இது போன்ற பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.
எண்ணெய்க் கழிவு ஆற்றில் கலந்தது குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழுவோ அல்லது ஆணயமோ அமைத்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட தமிழக அரசு உத்தரவிட வேண்டும். தேவையென்றால் சி.பி.ஐ. விசாரணைக்கும் பரிந்துரைக்கலாம்.
இழப்பீடு போதுமானது அல்ல:
மும்பையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு விவகாரத்தில் சுமார் ரூ.100 கோடி அபராதத் தொகை விதிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக வழங்கப்பட்டது. அண்மையில் எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு வந்த வணிகக் கப்பலில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு பிரச்னையில் ரூ. 240 கோடி அபராதம் விதிக்கப் பட்டது. ஆனால் தற்போதைய பிரச்னையில் எட்டரைக் கோடி ரூபாய் மட்டுமே இழப்பீடு பெறப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்களும் போதுமானது இல்லை. மத்திய, மாநில அரசுகள் தங்களுக்குள் மோதல் போக்கைக் கடைப்பிடிக்காமல் மீட்பு பணிகளில் இணைந்து செயல்பட வேண்டும். பருவ மழை காலகட்டத்தில் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்பை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு தவறிவிட்டது என்பதுதான் உண்மை என்றார் அன்புமணி.
நிகழ்ச்சியில் பசுமை தாயகம் அமைப்பின் நிர்வாகிகள் அருள், ராதாகிருஷ்ணன், சிவபிரகாசம், சபாபதி, சத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu