இந்திய கடலோரக் காவல்படை மாவட்ட கமாண்டர்கள் மாநாடு
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தியக் கடலோரக் காவல்படை மாநாட்டில் கலந்து கொண்ட மாவட்ட கமாண்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகள்
இந்தியக் கடலோரக் காவல் படையின் கிழக்கு பிராந்தியத்திற்கு உள்பட்ட மாவட்ட கமாண்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்ற இரண்டு நாள் மாநாடு சென்னையில் வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.
இந்தியக் கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்தியத்திற்கு உள்பட்ட மாவட்ட கமாண்டர்கள் பங்கேற்ற மாநாடு வியாழக்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது. மாநாட்டிற்கு கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய தளபதி ஏ.பி. படோலா தலைமை வகித்தார். இந்த மாநாட்டில் ஆந்திரா, தமிழ்நாடு மாநிலங்களில் அமைந்துள்ள சென்னை, விசாகப்பட்டனம், புதுச்சேரி மற்றும் தூத்துக்குடி ஆகிய நான்கு கடலோரக் காவல்படை மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட கமாண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்திய கடலோரக் காவல்படை பிராந்திய அளவில் ஆண்டுதோறும் மாவட்ட கமாண்டர்கள் பங்கு பெறும் மாநாடு நடத்தப்படுகிறது. இதில் ஓராண்டில் ஆந்திரா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் கடலோர காவல்படை பிரிவுகளின் செயல்பாடுகள், மனிதவள மேம்பாடு, பராமரிப்பு மற்றும் நிர்வாக அம்சங்கள் குறித்து சென்னையில் நடைபெற்ற இரண்டு நாள் மாநாட்டில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்ட மூத்த அதிகாரிகள், தற்போதைய கடல்சார் பாதுகாப்பு சூழல் மற்றும் வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள இந்திய கடலோர காவல்படையின் செயல்பாட்டு தயார்நிலை குறித்து ஆய்வு செய்தனர்.
இந்திய கடலோர காவல்படையின் நோக்கம், கடமைகளை நிறைவேற்றுவதற்காகவும், தற்போதைய கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தி மேம்படுத்தவும், கடலோர காவல்படை கிழக்கு பிராந்தியத்தின் செயல்பாட்டு திறன், உள் கட்டமைப்பு மேம்பாடு, பராமரிப்பு திட்டமிடல், பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது உள்ளிட்டவைகள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu