அரசு ஐடிஐ -க்கு ரூ. 3.73 கோடியில் புதிய கட்டடங்கள்: எம்எல்ஏ பூமி பூஜை
சென்னை தங்கசாலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூபாய் 3.73 கோடியில் புதிய கட்டடங்கள் அமைப்பதற்கான பூமிபூஜையில் ராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஐட்ரீம் ஆர். மூர்த்தி பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.
சென்னை தங்கசாலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூபாய் 3.73 கோடியில் புதிய கட்டடங்கள் அமைப்பதற்கான பூமிபூஜையில் ராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஐட்ரீம் ஆர். மூர்த்தி பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.
இராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 53-வது வார்டில் தங்கசாலை தொழில் பயிற்சி நிலையம் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இப்பயிற்சி மையத்தை நவீனப்படுத்தும் திட்டங்களுக்கு அண்மையில் தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இதனையடுத்து புதிய கட்டட பணிகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஐட்ரீம் ஆர். மூர்த்தி கலந்துகொண்டு ரூ.3.73 மதிப்பீட்டில. வகுப்பறை, ஆய்வுக்கூடம், பயிற்சி கூடம் உள்ளிட்டவைகளுக்கான புதிய கட்டடங்களை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.
அப்போது மூர்த்தி எம். எல். ஏ கூறுகையில், வடசென்னை என்பது தொழிற்சாலைகளும், தொழிலாளர்களும் நிரம்பிய பகுதியாகும். திறன் மிகுந்த தொழிலாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு தமிழகத்தின் பழைமையான தொழிற்பயிற்சி நிலையங்களில் ஒன்றான தங்க சாலை தொழில் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு புதிய கட்டிடங்கள் கட்டடங்கள் அமைக்கப்பட்ட பிறகு இப்பயிற்சி மையத்தில் ரூ. 7 கோடி மதிப்பீட்டில் பயிற்சி உபகரணங்கள் நிறுவப்பட்டு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயிற்சி நிலையமாக மேம்படுத்தப்படும்.
மேலும் நிகழ் கால தொழிற்சாலைகளின் தேவைக்கு ஏற்ப திறன் வாய்ந்த தொழிலாளர்களை உருவாக்கும் சூழ்நிலை ஏற்படுத்தப்படும். மேலும் புதிய பிரிவுகள் தொடங்கப்பட்டு கூடுதலாக மாணவர்கள் ஆண்டுதோறும் அனுமதிக்கப்பட்டு பயிற்சி பெறுவார்கள். இப்பயிற்சி மையத்தில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு படித்து முடித்தவுடன் முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என்றார் மூர்த்தி.
இந்நிகழ்ச்சியில் இராயபுரம் திமுக மேற்கு பகுதி செயலாளர் வ.பெ.சுரேஷ், மாமன்ற உறுப்பினர் வேளாங்கண்ணி, வட்ட செயலாளர் கௌரீஷ்வரன், பொதுப்பணித்துறை அதிகாரிகள், கல்லூரி முதல்வர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அனைத்து அரசு தொழிற் பயிற்சி நிலையங்களும் புனரமைக்க நடவடிக்கை: தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் திறன் மேம்பாடு அவசியமாகும். தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மாநிலத்தில் உள்ள 91 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் வாயிலாக தொழிற்சாலைகளின் தேவைக்கேற்ப திறன் பெற்ற தொழிலாளர்களை தொடர்ந்து வழங்கி வருகிறது.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை உலகத்தரம் வாய்ந்த தொழில் நுட்ப மையங்களாக தரம் உயர்த்துதல், 2021-22ஆம் ஆண்டு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் மானியக் கோரிக்கையில், தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்துச் செல்லும் பயிற்சியாளர்கள், தொழில் நிறுவனங்களில் உடனடி வேலை வாய்ப்பு பெறும் வகையில், பயிற்சியின் தரம் உயர்த்திட, அனைத்து அரசு தொழிற் பயிற்சி நிலையங்களும் புனரமைக்கப்பட்டு, நவீன தொழில்நுட்ப இயந்திரங்கள் நிறுவப்பட்டு எதிர்காலத் தேவையினை பூர்த்தி செய்திட புதிய தொழிற்பிரிவுகள் தொடங்கப்படும். பயிற்றுநர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் பயிற்சி வழங்கிட தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இதன்மூலம் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களையும் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தி அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் பன்மடங்கு உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி, தற்போது 71 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை தொழில் 4.0 தரத்திலான நவீன திறன் பயிற்சிகள் வழங்கும் வகையில் தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைக்கும், புனேவில் உள்ள M/s. TATA Technologies Ltd., நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்மூலம் அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து புதிய தொழில் நுட்பங்களுடன் கூடிய இயந்திரங்கள், உபகரணங்கள், கருவிகள் மற்றும் மென்பொருட்கள் ஆகியவை ரூ.2,877.43 கோடி செலவில் நிறுவப்பட்டு தொழில்நுட்ப மையங்களாக மாற்றப்படவுள்ளன. இதன்மூலம், ரோபோட்டிக்ஸ், இண்டஸ்ட்டிரியல் ஆட்டோமேஷன், மேனுபேக்சரிங் பிராசஸ் கண்ட்ரோல், அட்வான்ஸ்டு மேனுபேக்சரிங், மின்சார வாகனங்களுக்கான மெக்கானிக், இண்டர்நெட் ஆப் திங்க்ஸ், அடிட்டிவ் மேனுபேக்சரிங், இண்டஸ்ட்டிரியல் பெயிண்டிங், அட்வான்ஸ்டு வெல்டிங் போன்ற நவீன திறன் பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu