இந்திய கடலோர காவல் படை உதய நாள் விழாவில் கேக் வெட்டிய ஆளுநர் ரவி
இந்திய கடலோர காவல் படை உதயநாளையொட்டி சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக ஆளுநர் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று கேக் வெட்டி கடலோர காவல் படை அதிகாரிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்திய கடலோர காவல் படையின் 46-வது ஆண்டு உதய நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரை அருகே ஒளி வெள்ளத்தில் ரோந்து கப்பல்கள் அணிவகுத்து சென்றன. புதன்கிழமை நடைபெற்ற கிழக்கு பிராந்திய தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுனர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்தார்.
கடந்த பிப்.1, 1977-ம் தேதியன்று இந்திய கடற்படையிலிருந்து கடலோர காவல் படை தனியாக தொடங்கி வைக்கப்பட்டதை அடுத்து ஆண்டுதோறும் இந்த நாளை கடலோரக் காவல் படை உதய நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏழு கப்பல்களுடன் புதிதாக தொடங்கப்பட்ட கடலோர காவல் படை தற்போது 158 ரோந்து கப்பல்கள் 78 விமானங்களுடன் வலிமைமிக்க படையாக வளர்ந்துள்ளது. உலகின் நான்காவது பெரிய கடலோர காவல் படையாக இந்திய கடலோர காவல் படை இயங்கி வருகிறது.
இந்திய கடலோர காவல்படை என்பது இந்திய ஆயுதப் படையின் துணைப்பிரிவாகும். இந்தியாவின் கடல் வளங்களைப் பாதுகாக்கும் பொருட்டு இது உருவாக்கப்பட்டது. இது துணை இராணுவப்பிரிவுகளை ஒத்ததாகும். ஆனால் அவற்றைப் போல் அல்லாமல் கடலோரக் காவல்படை பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயற்படும் அமைப்பாகும். இதன் பணி கடல் வளங்களைப் பாதுகாப்பது, கப்பல்களைப் பாதுகாப்பது, கடல் வழிக் குடியேற்றத்தைக் கண்காணிப்பது, கடல்வழி போதைப்பொருட்கள் இந்தியாவிற்குள் வராமல் தடுப்பது ஆகியனவாகும்.
கடலோர காவல் படை தினத்தையொட்டி கிழக்கு பிராந்தியம் சார்பில் சென்னையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.பள்ளிகளுக்கு இடையிலான ஓவியப் போட்டி, மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி, மீனவர்களுக்கான வாலிபால் போட்டி, துப்புரவு பணிகள், தூய்மை குறித்த விழிப்புணர்வு , சைக்கிள் பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்கெனவே நடந்து முடிந்துள்ள நிலையில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் கடலோர காவல் படை ரோந்து கப்பல்கள் நேரடியாக பொதுமக்கள் முன்னிலையில் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஒளி வெள்ளத்தில் அணிவகுத்த கப்பல்கள்: சென்னை மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை இடையே கடலோர காவல் படையின் ரோந்து கப்பல்களான சுஜய் சாகர், அன்னிபெசன்ட், ராணி அபேக்கா ஆகியவை ஒளி வெள்ளத்தில் செவ்வாய்க்கிழமை மாலை அணிவகுத்து சென்றன.
அப்போது மெரினா கடற்கரையின் விவேகானந்தர் இல்லம் அருகே கடற் பகுதியில் கண்காணிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்த பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கடலோர காவல் படை வீரர்கள் பங்கேற்று கடலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை காப்பாற்றுவது குறித்த செயல் விளக்கத்தை செய்து காண்பித்தனர்.
ஆளுனர் ஆர்.என். ரவி வாழ்த்து: இதற்கிடையே கடலோரக் காவல் தின சிறப்பு நிகழ்ச்சி கிழக்கு பிராந்திய தலைமையகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கிழக்கு பிராந்திய தளபதி ஏ.பி.படோலா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர். என் .ரவி கேக் வெட்டி கடலோரக் காவல் படையினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu