தனியார் ஊரத் தொழிற்சாலையை மூட வலியு றுத்தி மாநகராட்சி மண்டல குழு தீர்மானம்
பைல் படம்
தனியார் ஊரத் தொழிற்சாலையை மூட மாநகராட்சி மண்டல குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை திருவொற்றியூர் அருகே எண்ணூரில் அமோனியா வாயு கசிவால் பொது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திய உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என சென்னை மாநகராட்சி மண்டல குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலக் குழு கூட்டம் தலைவர் தி. மு. தனியரசு தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் தனியரசு பேசியது, எண்ணூரில் அமைந்துள்ள கோரமண்டல் தனியார் தொழிற்சாலயில் கடந்த டிச.26-ம் தேதி செவ்வாய்க்கிழமை அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. இத்தகவல் கிடைத்தவுடன் மாநகராட்சி ஊழியர்கள் , போலீஸார், தீயணைப்பு மீட்பு படையினர் உள்ளிட்டோர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.இதனால் பொதுமக்களுக்கு ஏற்படவிருந்த பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. இந்த ஆலையை தற்காலிகமாக மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வரவேற்கத்தக்கது.
திருவொற்றியூர், எண்ணூர் பகுதியில் வாழும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வரும் இந்த உரத்தொழிற் சாலையை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விரிவான கள ஆய்வு செய்து ஆலையை நிரந்தரமாக மூடிட மண்டல குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. தமிழக அரசின் மேல் நடவடிக்கைகாக இத்தீர்மானம் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என தெரிவித்தார். தீர்மானத்திற்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
சென்னை எண்ணூரில் இயங்கி வரும் கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் தொழிற்சாலையில், விவசாயத்திற்குத் தேவையான உரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் டிச.26 -ஆம் தேதி இரவு 11.45 மணியளவில், அந்த தொழிற்சாலையின் அம்மோனியா குழாய்களில் ஏற்பட்ட வாயுக் கசிவினால் அருகில் உள்ள பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டன. வாயுக் கசிவினைக் கண்டறிந்தவுடன், நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, 20 நிமிடங்களில் அந்தத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக் கசிவு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. மேலும், காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் ஒருங்கிணைந்து போதுமான ஆம்புலன்ஸ்களை உடனடியாக ஏற்பாடு செய்ததால், நிலைமை சரிசெய்யப்பட்டது.
இந்த வாயுக் கசிவினால், பெரியகுப்பம், சின்னக்குப்பம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 60 பேருக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் அதன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது 52 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு மருத்துவ பராமரிப்பு மற்றும் சுகாதார ஆலோசனைகளை வழங்குவதற்காக இரண்டு நுரையீரல் நிபுணர்களைக் கொண்டு 5 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. தற்போது குழாயில் அம்மோனியா கசிவு இல்லை என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu