புயலின்போது படகுகள் மூலம் சேவையாற்றிய மீனவர்களுக்குப் பாராட்டு
மிக்ஜாம் புயலின்போது படகுகள் மூலம் சேவையாற்றிய மீனவர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது
சென்னை திருவொற்றியூரில் மிக்ஜாம் புயலின்போது படகுகள் மூலம் சேவையாற்றிய மீனவர்களுக்கு சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு பாராட்டு தெரிவித்தார்.
மிக்ஜாம் புயலிலால் ஏற்பட்ட கனமழையால் புழல், சோழவரம் ஏரி மற்றும் கொசஸ்தலை ஆறுகளின் உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனையடுத்து திருவொற்றியூர் மேற்கு பகுதிக்கு உள்பட்ட 4, 6, 7 ஆகிய வட்டங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் உள்புகுந்து நீர்மட்டம் மார்பளவுக்கு உயர்ந்தது.
இதனால் தாழ்வான வீடுகளில் வசித்து வந்த ஆயிரக்கணக்கானோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். ஆதிதிராவிடர் காலனி எர்ணாவூர், சண்முகபுரம், சரஸ்வதி நகர், கார்கில் நகர், எம்.ஜி.ஆர். நகர், பெரியார் நகர், பாலகிருஷ்ணா நகர் உள்ள பகுதிகளை முற்றிலுமாக வெள்ளநீர் சூழ்ந்தது. மக்கள் அன்றாடத் தேவைகளுக்குக் கூட வெளியே செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாயினர்.
இதனையடுத்து மாநகராட்சி சார்பில் படகுகள் ஏற்பாடு செய்யப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்றன. நான்கு நாள்களாக படகுகள் மூலம் உணவு, குடிநீர், மருந்துகள் கொண்டு செல்லப்பட்டு பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப் பட்டது. மேலும் கர்ப்பிணிகள் சிலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். முதியவர்கள், சிறுவர்களை மீட்டு பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இவ்வாறு நான்கு நாள்களாக இரவு பகல் பாராது வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களுக்காக எவ்வித எதிர்பார்ப்புகளும் இன்றி சேவையாற்றிய மீனவர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு திங்கள் கிழமை பாராட்டு தெரிவித்தார். அப்போது எதிர்பார்ப்புக ளின்றி சேவையாற்றிய மீனவர்கள், மலர்மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் ஆர்.சி.ஆசைதம்பி, ஆர்.எஸ்.சம்பத், எம்.வீ.குமார், ஆர்.குமரேசன், வி.மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu