சென்னை துறைமுக பாதுகாப்பு பணியில் 50 ஆண்டுகள்: சி.ஐ.எஸ்.எஃப். சாதனை
மத்திய தொழில் பாதுகாப்பு படை பிரிவு (சி.ஐ.எஸ்.எஃப்) சென்னை துறைமுகத்தின் பாதுகாப்பு பணியில் 50 ஆண்டுகளை நிறைவு செய்து சாதனை படைத்துள்ளது.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எஃப்) என்ற பிரிவை 1969-ம் ஆண்டு உள்துறை அமைச்சகம் ஏற்படுத்தியது. இப்படை பிரிவில் தற்போது சுமார் 1.60 லட்சம் வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். நாடு முழுவதும் சுமார் 350 நிறுவனங்களை பாதுகாக்கும் பணியில் சி.ஐ.எஸ்.எஃப். ஈடுபட்டு வருகிறது. அணுசக்தி உற்பத்தி, விண்வெளி, விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், அரசு கட்டடங்கள், பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் உள்ளிட்டவைகளில் இப்படை பிரிவு செயலாற்றி வருகிறது.
சென்னைத் துறைமுகத்தின் பாதுகாப்பு பணி கடந்த டிச.7,1972-ல் சி.ஐ.எஸ்.எஃப். வசம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது 50 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததையொட்டி சென்னைத் துறைமுகத்தில் சி.ஐ.எஸ்.எஃப் சார்பில் சென்னைத் துறைமுக வளாகத்தில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகங்களில் தலைவர் சுனில் பாலிவால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மத்திய தொழில் பாதுகாப்பு படை தென்மண்டல ஐ.ஜி. அஞ்சனா சின்காவிடம் சென்னைத் துறைமுகத்தின் சார்பில் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் குடியேற்றம், சுங்கம், கடலோரக் காவல்படை, காவல்துறை மற்றும் துறை தலைவர்கள் கலந்து கொண்டனர்.
சென்னைத் துறைமுகம் ஓர் மீள் பார்வை.. இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகங்களுள் ஒன்றாகும். அண்மைக் காலங்களில் முக்கியமான கொள்கலன் துறைமுகமாக மாறியுள்ள இது முன்னர் போக்குவரத்துக்கு உரிய முக்கிய துறைமுகமாகவே விளங்கியது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, சிறப்பாக உற்பத்தித் தொழில் வளர்ச்சிக்கான முக்கிய காரணிகளுள் இதுவும் ஒன்று. தற்போது, சிங்கப்பூர், ஹாங்காங், ஷங்காய், ஷென்ஸென் ஆகிய துறைமுகங்களுக்கு இணையாக விரிவாக்கப்பட்டு வருகிறது.
தென்னிந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் உள்ள சென்னைத் துறைமுகம், நூறாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட ஒரு செயற்கைத் துறைமுகம் ஆகும். இது கோரமண்டல் கரை எனப்படும் கிழக்குக் கரையோரப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தொடக்கப் பகுதிகள், 1861 ஆம் ஆண்டில் கட்டப்படவை ஆகும். ஆனால் 1868 ஆம் ஆண்டிலும், 1872 ஆம் ஆண்டிலும் ஏற்பட்ட சூறாவளியினால் இது பயன்படுத்தப்பட முடியாததாயிற்று. 1876 ஆம் ஆண்டில்( ட ) வடிவத் தடைச் சுவருக் கான கட்டுமான வேலைகள் தொடங்கப்பட்டன. ஆனால் 1881 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சூறாவளி, பெரும்பாலும் நிறைவடைந்த நிலையில் இருந்த துறைமுகத்தை அடித்துச் சென்று விட்டது. இத் துறைமுகம் புதிதாக அமைக்கத் தொடங்கிய 1881 ஆம் ஆண்டையே தொடக்கமாகக் கொண்டு 2007 ஆம் ஆண்டில் சென்னைத் துறை முகத்தின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் 2022 -ல் 140 ஆண்டைக் கடந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu