குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக ரூ.16.7 லட்சம் மோசடி: ஒருவர் கைது

குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக ரூ.16.7 லட்சம் மோசடி: ஒருவர் கைது
X

கைது செய்யப்பட்ட மகாவீர்.

குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக ரூ.16.7 லட்சம் மோசடியில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அயனாவரம் சோமசுந்தரம் 2-வது தெருவை சேர்ந்தவர் பாலாஜி (45). இவருக்கு நம்மாழ்வார் பேட்டை சாமிபக்தன் தெரு பகுதியைச் சேர்ந்த மகாவீர் 42 மற்றும் அவரது மனைவி கார்த்திகா 35 தம்பதியினர் அறிமுகமாகினர்.

பாலாஜியிடம் வெளிநாட்டில் இருந்து வரும் தங்கத்தை குறைந்த விலைக்கு வாங்கித் தர தங்களிடம் ஆள் இருப்பதாகவும், சீட்டுப் பணத்தில் அதிக லாபம் கிடைக்கும் வகையில் வழிவகை செய்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர்.

இதனை நம்பிய பாலாஜி மகாவீர்-கார்த்திகா தம்பதியரிடம் தனது வங்கிக் கணக்கில் இருந்த 16 லட்சத்து 7 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தைக் கொடுத்துள்ளார். ஆனால் பணம் பெற்று நீண்ட நாட்கள் ஆகியும் சொன்னபடி தங்கம் வாங்கித் தராமலும், சீட்டுப் பணம் விவகாரத்திலும் முறையான பதில் அளிக்காமலும் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

இதனால் தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த பாலாஜி, தன்னை ஏமாற்றிய தம்பதிகள் மீது காவல்துறை நடவடிக்கை வேண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட மகாவீர்-கார்த்திகா தம்பதியரை கைது செய்து உரிய விசாரணை நடத்த காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தலைமைச் செயலக காவலர் குடியிருப்பு போலீசார் மகாவீர்-கார்த்திகா தம்பதியரை தேடிவந்தனர். இந்நிலையில் ஓட்டேரி சுடுகாடு அருகே நேற்று மகாவீர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையில் பாலாஜி உள்ளிட்ட பல பேரிடம் குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி மகாவீர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த தலைமைச்செயலக காவலர் குடியிருப்பு போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த மோசடிக்கு உறுதுணையாக இருந்த கார்த்திகாவை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture