போலி பாஸ்போர்ட்டில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த வங்காளதேச நபர் கைது

போலி பாஸ்போர்ட்டில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த வங்காளதேச நபர் கைது
X

சென்னை விமான நிலையம் (பைல் படம்)

போலி பாஸ்போர்ட்டில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த வங்காளதேச நாட்டை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபாய் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் தனியார் பயணிகள் விமானம், நேற்று அதிகாலை சா்வதேச முணையத்திலிருந்து புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது ரிஸ்வான் கான் (57) என்ற பெயரில் திரிபுரா மாநிலம் அகர்தாலா முகவரி பாஸ்போா்ட்டுடன் பயணி ஒருவர் துபாய் செல்ல வந்தார். அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை நிறுத்தி வைத்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதையடுத்து அவருடைய பாஸ்போர்ட்டை கம்ப்யூட்டரில் ஆய்வு செய்தபோது, அது போலியான பாஸ்போர்ட் என்று தெரியவந்தது.

இதனால் குடியுரிமை அதிகாரிகள் அந்த பயணியின் பயணத்தை ரத்து செய்தனா்.மேலும் அவரை தனி அறையில் வைத்து,நீண்ட நேரமாக விசாரணை நடத்தினா். அப்போது இவர் வங்காள தேசத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்தது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்குள் மேற்குவங்க மாநிலம் வழியாக ஊடுருவியுள்ளாா்.

அதன் பின்பு திரிபுரா மாநிலம் சென்று அங்கு சில ஏஜென்டுகள் இடம் பணம் கொடுத்து போலியான ஆவணங்கள் மூலம் அகா்தாலா முகவரியில் இந்திய பாஸ்போா்ட் பெற்றுள்ளாா். அதன் மூலம் தற்போது துபாய் செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார் என்று தெரியவந்தது.

இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் வங்காள தேசத்தை சோ்ந்த ரிஸ்வான் கானை கைது செய்தனர்.அதோடு அவரை தனி அறையில் வைத்து அவரை துருவித் துருவி விசாரித்தனர். மத்திய உளவுப்பிரிவினா், தீவிரவாதிகளை கண்காணிக்கும் சிறப்பு போலீஸ் படையினர்,கியூபிரிவு போலீசாா் உட்பட பல்வேறு பிரிவினர் பல மணி நேரம் தொடர்ந்து விசாரித்தனர்.

இவர் இந்தியாவிற்குள் ஊடுருவியது எப்படி? அதற்கு யார் உறுதுணையாக இருந்தனா்? இவர் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு உடையவரா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரித்தனா். அதன் பின்பு ரிஸ்வான் கானை நேற்று இரவு மேல் நடவடிக்கைக்காக சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரிஸ்வான் கானை அவர்களுடைய அலுவலகத்திற்கு கொண்டு சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் வங்காளதேசத்தை சேர்ந்த ஒருவர் இந்திய போலி பாஸ்போர்ட்டில் துபாய் செல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story