ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை
பைல் படம்
சென்னை மணலியில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட கடன் தொல்லையால் ஆட்டோ ஓட்டுனர் பார்த்திபன் (26) புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
மணலி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் பார்த்திபன் (26). ஆட்டோ ஓட்டுனராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி துர்கா. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். பார்த்திபன் ஆன்லைனில் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் பெருமளவு பணத்தை இழந்த நிலையில் மீண்டும் மீண்டும் கடன் வாங்கி சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் மிகுந்த கடன் தொல்லைக்கு ஆளாகியதாகக் கூறப்படுகிறது.
இவருக்குக் கடன் கொடுத்தவர்கள் கடன் தொகையைக் திருப்பிக் கேட்டு தொந்தரவு செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனால் பார்த்திபன் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை தனது மனைவி துர்காவை அவரது தாய் வீட்டுக்கு குழந்தையுடன் அனுப்பி வைத்து விட்டாராம். இதனையடுத்து புதன்கிழமை பார்த்திபனின் வீடு வெகுநேரமாகத் திறக்கப்படாததை அடுத்து அருகில் வசிப்போர் ஜன்னலை திறந்து பார்த்தபோது ஆட்டோ ஓட்டுனர் பார்த்திபன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸார் பார்த்திபனின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வு செய்வதற்காக அரசு ஸ்டான்லி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மணலி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu