தமிழகத்தில்வடகிழக்கு பருவமழை 21 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது

தமிழகத்தில்வடகிழக்கு பருவமழை   21 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது
X

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்.

வடகிழக்கு பருவமழை பொறுத்தவரை தமிழகத்தில் 21 % அதிகமாக மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது :-

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 3 நாட்களுக்கு மேல் நோக்கி மெதுவாக நகரக்கூடும். இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றார்.

அதேபோல் விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறிய அவர்,

இன்று தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையும், மதுரை, விருதுநகர், சிவகங்கை, கடலூர், உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதியில் மழைபெய்யக்கூடும் என்றும் கூறினார். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை 12 செ.மீ., காரைக்கால் 10 செ.மீ., மழையும் பதிவாகி உள்ளது.

*மீனவர்களுக்கான எச்சரிக்கை:*

நாகப்பட்டினம் திருவாரூர் மற்றும் அதை ஒட்டிய கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிமி வேகத்தில் வீசக்கூடும் என்பதால் நாளை மற்றும் நாளை மறுநாள் மன்னார்வளைகுடா பகுதியில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

*வடகிழக்கு பருவமழை*

வடகிழக்கு பருவமழை பொறுத்தவரை தமிழகத்தில் 21 % அதிகமாக மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இந்த காலகட்டத்தில் 17செ.மீ பதிவாக வேண்டும், ஆனால் தற்போது 20 செ.மீ பதிவாகி உள்ளது.

அதேப்போல் சென்னையில் 32% குறைவாக வடகிழக்கு பருவ மழை பெய்துள்ளது. 25 செ.மீ பெய்ய வேண்டிய இடத்தில், இதுவரை 17செ.மீ மட்டுமே மழை பதிவாகியுள்ளது.

*தீபாவளி தினத்தன்று மழை விட்டு விட்டு பெய்ய வாய்ப்புள்ளதாகவும் புவியரசன் தெரிவித்துள்ளார்.*

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil